×

வேடசந்தூர் அருகே நின்ற வேன் மீது லாரி மோதி முதியவர் பலி

*10 பேர் காயம்

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.10 பேர் காயமடைந்தனர்.வேடசந்தூர் அருகேயுள்ள விட்டல் நாயக்கன்பட்டியில் இருந்து நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றி கொண்டு அய்யலூரில் இறக்கிவிட வேன் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. வேனை தண்ணீர்பந்தம் பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (31) என்பவர் ஓட்டி வந்தார். விட்டல் நாயக்கன்பட்டி அருகே வந்த போது, அதே நூற்பாலையை சேர்ந்த வேன் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது.

இதனை பார்த்த டிரைவர் வேனை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த வேனின் டிரைவருடன் இணைந்து பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து கரூரை நோக்கி சென்ற லாரி நின்றிருந்த வேனின் பின்பக்கம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த எரியோடு அருகேயுள்ள எருதப்பன்பட்டியை சேர்ந்த ராஜாமணி (50) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் வேனிலிருந்த கல்பனா (22), பெரியசாமி (46), மீனாட்சி, சுகுணா, சங்கீதா, பிரவீனா உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த இருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், மற்றவர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.

The post வேடசந்தூர் அருகே நின்ற வேன் மீது லாரி மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Vedasanthur ,Vittal Nayakkanpatti ,Ayyalur ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்