
- கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்
- நிலத்தைத் தொடர்ந்து கடல் வளத்துக்கும் வேட்டு
தமிழகத்தில் சுமார் 1,076 கி.மீ நீளமுள்ள கடற்கரை உள்ளது. இந்திய பெருங்கடலில் லட்சத்தீவு கடலின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்கு கரைக்கும் இடையேயான சுமார் 100 முதல் 125 மைல் தூர அகல பரப்பிலும், சுமார் 1,335 மீட்டர் ஆழ பரப்பிலும் அமைந்துள்ள ஒரு வளைந்த கடல்பரப்பு, மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் முதல் சாயல்குடி அருகே வேம்பார் (தூத்துக்குடி மாவட்டம்) வரையிலும் அமைந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக 1974ல் யுனெஸ்ேகாவால் பரிந்துரை செய்யப்பட்டு, ஒன்றிய அரசால் 1989ல் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 1989 முதல் கடல்சார் உயிர்கோள காப்பகம், தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவாகவும் விளங்குகிறது. இந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, வான்தீவு உட்பட 21 குட்டி தீவுகள் அமைந்துள்ளன. மேலும், இக்கடல் பகுதியில் அரியவகை பவளப்பாறைகள் மீன்களின் இருப்பிடமாகவும், இயற்கை பேரிடர் காலங்களில் மீனவ கிராமங்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர் ரோச்மா நகர் என மாவட்டத்திலுள்ள 180 கடற்கரைகளில் 1,900 விசைப்படகுகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், வல்லம் போன்றவற்றின் மூலம் மீன்பிடி தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாள் ஒன்றிற்கு ₹5 கோடி வரை மீன் வர்த்தகம் நடந்து வருவதால், அந்நிய செலவாணியை ஈட்டுவதில் மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் இம்மாவட்ட மீன்பிடித் தொழில் மூலம் மட்டும் ₹10 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நிய செலவாணி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில்தான் மன்னார் வளைகுடா கடல் எல்லை பகுதியில் ஒன்றிய அரசின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விடுவதற்கு 11.2.2025 அன்று தொடங்கியுள்ளது. ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் மக்களிடம் கருத்து கேட்காமல் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த பட்டியலில் தற்போது ஆழ்துளை எரிவாயு கிணறுகள் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டமும் இணைந்து உள்ளது. திறந்தவெளி அனுமதி கொள்கை (ஒப்பன் அக்ரியேஜ் லைசனிங் பாலிணி) எனும் ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழான 10வது சுற்று ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தென் தமிழக ஆழ்கடலில் 9990.96 சதுர கிலோமீட்டர் பரப்பிலான வட்டாரமும் இடம்பெற்றுள்ளது.
இந்த வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் 31/7/2025 வரை விருப்பமான இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஏல அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த மன்னார் வளைகுடா கடலில் எரிவாயு கிணறுகளை அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை பவளப்பாறைகள், விவசாயம், தென்னை உள்ளிட்ட பல்வேறு தொழில்களும், மக்களும் பாதிக்கும் அபாயம் இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலில் எண்ணெய் கிணறுகள் அமைக்கும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து கடல்வள ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘பொதுவாக, கடலில் எரிவாயுக்காக ஆழ்துளை கிணறுகள் தோண்டும்போது மண், கழிவுகள் அகற்றி வெளியேற்றும்போதே, வளமான பல்லுயிர் பெருக்கம், கடல் வாழ் உயிரினங்கள், அரியவகை படிமங்கள், கடல் வளம், சுற்றுச்சூழல் பெரியளவில் பாதிக்கப்படும். மேலும், கடலில் ஆழ்குழாய்களை பதிப்பதற்காக தூண்கள், வழித்தடங்கள் அமைக்கும்போது குழிகள் தோண்டப்பட வேண்டும். இப்பணியின்போது நில அதிர்வு உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
கடலில் நில அதிர்வு ஏற்பட்டால் என்ன நிகழும் என்பதை சுனாமியின்போதே நாம் உணர்ந்திருப்போம். மேலும், கிணறு அமைக்கும் பணியின்போது, சக்தி வாய்ந்த ஒலி, ஒளிகளை பயன்படுத்தும்போது கடலின் இயல்பு நிலை மாற்றமடைய சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், எண்ணெய் உற்பத்திக்கு முன்பே ஹைட்ரோகார்பன் வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு வெளியாகும் ஹைட்ரோகார்பனோடு மேலும் ஆழ்கடலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் படிந்துள்ள சில விஷ வாயுக்களும் வெளியேறக்கூடும். இதனால் கடல் நீர் விஷத்தன்மை அடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், பீனால், அல்கைல்பீனால், நாப்தெனிக் அமிலங்களின் குழுக்களை சேர்ந்த வேதிப்பொருட்களும் வெளியேறும். இவை மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. இதனால் புற்றுநோய், டிஎன்ஏ பாதிப்பு, கருநச்சுத்தன்மை, வயிற்று கோளாறு உள்ளிட்ட கடுமையான விளைவுகள் ஏற்படும்.
ஆழ்கிணறு தோண்டும் பணிக்காக அகற்றப்படும் கழிவு மணலை முழுமையாக வெளியேற்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மீண்டும் கடலிலே கொட்டப்படும்போது, வேதிப்பொருட்களுடன் கூடிய மண் விஷத்தன்மை கொண்டதாகவும், கடல் வளத்தை அடியோடு பாதிக்க வைக்கக்கூடியதாகவும் மாறும். கடல்வளத்தை காக்கும் பவளப்பாறைகளையும் அழித்து விடும். கடல் நீர் மாசடையும்போது நாம் விரும்பி சாப்பிடும் மீன்கள், இறால், நண்டு மற்றும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும். அதை நம்பி உள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் அடியோடு பாதிக்கும்’’ என்றனர்.
கடல்வளம், மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் போல பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நாள் ஒன்றிற்கு ₹5 கோடி வரை மீன் வர்த்தகம் நடந்து வருகிறது.
- ஆழ்கிணறு தோண்டும் பணிக்காக அகற்றப்படும் கழிவு மணலை முழுமையாக வெளியேற்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மீண்டும் கடலிலே கொட்டப்படும்போது, வேதிப்பொருட்களுடன் கூடிய மண் விஷத்தன்மை கொண்டதாகவும், கடல் வளத்தை அடியோடு பாதிக்க வைக்கக்கூடியதாகவும் மாறும்.
- ஆண்டுதோறும் இம்மாவட்ட மீன்பிடித் தொழில் மூலம் மட்டும் ₹10 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நிய செலவாணி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
ஊரை விட்டு வெளியேறும் சூழல் வரும்
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஒன்றிய அரசு ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்பு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க விரும்பும் நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கினால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீன்வளம் பாதித்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமாநாதபுரம் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த திட்டம் செயலாக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும். ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்தின் கடல் வளம் கடுமையாக பாதிக்கப்படும். மீன்வளம் குறைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகும். தற்போது மீனவர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன்பிடி தொழில் அழிந்து ஊரை விட்டே மீனவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இந்த ஆபத்தான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்றனர்.
அனைத்துக்கும் பேராபத்து
விசைப்படகு சங்கத்தலைவர் காரல் மார்க்ஸ் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் உள்ள 180 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருவது மன்னார் வளைகுடா கடல் தான். மீன்பிடித்தல் மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடிய பாரம்பரிய தொழிலாக இருந்தாலும் கூட, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2004ல் சுனாமி பேரலை வந்தபோது தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் கடற்கரை மாவட்டங்களை அரணாக இருந்து பாதுகாத்தவை இந்த பவளப்பாறைகள் தான். இத்தகைய பவளப்பாறைகள், அரியவகை உயிரினங்கள், மீன்கள் உள்ள இப்பகுதியில் ஒன்றிய அரசு கடல்சார் ஆழ்துளை கிணறு அமைத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். கடல் வளமும் பாதிக்கும். மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே ஒன்றிய அரசு இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்றார்.
ரிலையன்ஸ், வேதாந்தா ஓஎன்ஜிசி இடையே போட்டி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் ஹைட்ரோகார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதனை ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை (ஓஏஎல்பி) அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த கடற்பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவங்களுக்கு வழங்கி வருகிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும் மீன்பிடிப் பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனப் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அரிய உயிரினங்கள் இறந்து போகும்
தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதிகளில் அரியவகை பாதுகாக்கப்பட்ட ஆவுளியா உள்ளிட்ட 25 பாலூட்டிகள், ஆமைகள் உயிர்வாழ்கின்றன. டால்பின்கள், திமிங்கலங்கள் போன்ற உயிரினங்கள் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலியை எழுப்புவதன் மூலமே தங்களுக்குள் தகவல்களை பறிமாறிக் கொண்டு தங்களது பயண வழிகளையும் தீர்மானிக்கின்றன. கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின்போது எழுப்பப்படும் வெடிச்சத்தம் கடல்வாழ் உயிரினங்களை மிகவும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி எண்ணெய், எரிவாயு எடுக்கும்போது வெளியிடப்படும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறையுமென்றும் ஆவுளியா, ஆமைகள் போன்ற முக்கியமான பல கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்துபோகும். இந்த பகுதியில் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் தோண்டுவது வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
விருது பெற்ற காப்பகம்
இயற்கை வளம், வன உயிர்கோளம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ அமைப்பால் விருது வழங்கப்படும். அந்த விருது, கடந்த 2023, ஜூன் 14ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக இயக்குனர், அப்போதைய மாவட்ட வன அலுவலர் பகான் ஜகதீஷ் சுதாகருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம்; கடும் நில அதிர்வு ஏற்படும்; மீன்பிடித்தொழில் அழியும்… கடல் விஷமாகும் அபாயம் appeared first on Dinakaran.
