×

விஜய் படங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி தவெக நிர்வாகி அருண்ராஜ் பதுக்கிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்: திருச்செங்கோடு அருகே பரபரப்பு

 

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே அடுக்குமாடி குடியிருப்பில், வாக்காளர்களுக்கு பரிசாக வழங்குவதற்காக தவெக நிர்வாகி அருண்ராஜ் பதுக்கி வைத்திருந்த விஜய் புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி சில்வர் பாத்திரங்களை, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் வரகூராம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்காக, ஒரு வீட்டில் சில்வர் பாத்திரங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக திருச்செங்கோடு ஆர்டிஓ லெனினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்தனர். இந்த சோதனையில் ‘ஏ’ பிளாக்கில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்த வீட்டில், சுமார் 250க்கும் மேற்பட்ட சில்வர் பாத்திரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் தவெகவினர் சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கருதப்படும் அருண்ராஜ் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. மொத்தம் 4 மூட்டைகளில் சில்வர் பாத்திரங்கள் இருந்தது. இதை தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிஷாந்த் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், அப்பகுதியில் ஆர்டிஓ லெனின் மற்றும் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர், வேறு ஏதாவது வீடுகளில் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மக்கள் குடியிருக்கும் பகுதியில், தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கு வதற்காக பரிசு பொருட்களாக சில்வர் பாத்திரங்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம், திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thaveka ,executive ,Arunraj ,Vijay ,Thiruchengode ,Namakkal district ,Thiruchengode… ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுந்தர், வருண் வாழ்த்து