×

எம்பிபிஎஸ் தேர்வில் வெற்றி பெற வைப்பதாக மருத்துவ மாணவி பலாத்காரம் சென்னை அரசு டாக்டர் கைது

 

ஊட்டி: ஊட்டியில் உள்ள நீலகிரி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் வட மாநில மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த சென்னையை சேர்ந்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவி தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த சூழலில் இதே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஓம் பிரகாஷ் (44), மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக கூறி மாணவியை தனியாக அழைத்து பேசி வந்துள்ளார்.

தேர்வுகள் குறித்து பேசுவதற்காக மாணவியை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அவர் வரவழைத்துள்ளார். அங்கு வந்த அவரிடம் தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக மேலிடத்தில் பேசி விட்டேன். அச்சப்பட வேண்டாம் என ஆசை வார்த்தை கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, மருத்துவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு சென்ற ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஊட்டி நகர மத்திய காவல் நிலைய போலீசார் மருத்துவர் ஓம் பிரகாஷ், மாணவி மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போதையில் மருத்துவர் ஓம் பிரகாஷ் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. மேலும் மருத்துவ மாணவியை அவர் வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு ஊட்டி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிந்து டாக்டர் ஓம் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் நேற்று அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அரசு மருத்துவர் ஓம் பிரகாஷ் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் ஆன நிலையில் 2 மனைவிகளையும் பிரிந்து தனியாக ஊட்டியில் வசித்ததும் தெரிய வந்தது. டாக்டர் ஓம் பிரகாஷ் வேறு மாணவிகளிடமும் அத்துமீறி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai government ,MBBS ,Ooty ,Chennai ,Nilgiris Government Medical College ,Nilgiris ,Ooty… ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுந்தர், வருண் வாழ்த்து