×

ரயில் நிலைய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ‘கன்பார்ம்’ டிக்கெட் பயணிகளுக்கு மட்டுமே நடைமேடையில் அனுமதி: சென்னை சென்ட்ரலிலும் நடைமுறைக்கு வருகிறது

புதுடெல்லி: ரயில் நிலைய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ‘கன்பார்ம்’ டிக்கெட் பயணிகளுக்கு மட்டுமே நடைமேடையில் அனுமதி அளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலம் மகா கும்பமேளா விழாவிற்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் குவிந்திருந்த பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற விபத்துகள் மட்டுமின்றி ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் அத்துமீறல், நகை பறிப்பு, தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

எனவே, ரயில் பயணிகளின் பாதுகப்பை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, நாடு முழுவதும் உள்ள 60 ரயில் நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் பெற்ற பயணிகளுக்கு மட்டுமே நடைமேடை அணுகலை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த பட்டியலில் சென்னை சென்ட்ரல், பெங்களூரு சிட்டி, ஹவுரா சந்திப்பு, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், புதுடெல்லி ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கும். ரயில்வே நிர்வாகத்தின் புதிய விதிகள் அமலுக்கு வந்தவுடன், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளும், டிக்கெட் இல்லாதவர்களும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு வெளியே குறிப்பிட்ட பகுதிகளில் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ரயில்கள் வரும்போது மட்டுமே பயணிகள் நடைமேடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெரிய ரயில் நிலையங்களில் வார் ரூம்கள் அமைக்கப்படும். கண்காணிக்க இந்த நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகளுடன், நிலையத்தின் திறன் மற்றும் ரயில்களின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து டிக்கெட் விற்பனையின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடு இருக்கும். மேலும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சேவைப் பணியாளர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். அவசர காலங்களில் உதவி பெற ரயில்வே ஊழியர்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடிய சீருடைகள் விநியோகிக்கப்படும். பிளாட்பாரங்கள் மற்றும் நிலையங்களுக்கு அங்கீகரிக்கப்படாத நுழைவு வாசல்கள் சீல் வைக்கப்படும். 12 மீட்டர் (40 அடி) அகலம் மற்றும் 6 மீட்டர் (20 அடி) அகலம் கொண்ட இரண்டு புதிய நடைபாதை மேம்பால வடிவமைப்புகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இந்த நிலையங்களில் மூத்த அதிகாரிகள் நிலைய இயக்குநர்களாக நியமிக்கப்படுவார்கள்; அவர்கள் இடத்திலேயே முடிவுகளை எடுக்கவும் நிதி சார்ந்த விஷயங்களைக் கையாளவும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள். நிகழ்நேர ஒருங்கிணைப்புக்காக புதிய தலைமுறை டிஜிட்டல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரயில் நிலைய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ‘கன்பார்ம்’ டிக்கெட் பயணிகளுக்கு மட்டுமே நடைமேடையில் அனுமதி: சென்னை சென்ட்ரலிலும் நடைமுறைக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,New Delhi ,Delhi ,Maha Kumbh Mela festival ,Uttar Pradesh ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...