×

இறுதிப் போட்டிகளில் தோற்காத நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியனாகுமா இந்தியா?

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 9வது தொடரின் இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இறுதிப் போட்டியில் இந்தியா ஆடுவதால், போட்டியை நடத்தும் பாகிஸ்தானில் அல்லாமல் இன்று துபாயில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. லீக், அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா துபாயில் மட்டுமே ஆடியுள்ளது.
மாறாக நியூசிலாந்து அணி இந்தியாவுடன் நடந்த ஒரு போட்டி தவிர, மற்றவற்றில் பாகிஸ்தானில் உள்ள ஸ்டேடியங்களில் ஆடியது. இந்தியாவுடன் நடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த நியூசி, அரையிறுதியில் ஆட பாகிஸ்தானுக்கு சென்றது.

அதில் வெற்றி பெற்று தற்போது மீண்டும் இறுதிப் போட்டியில் ஆட துபாய் வந்துள்ளது. அந்த அணி, துபாயில் கடந்த 3 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவும் அதே களம், அதே அணி என நியூசியை விரட்ட வசதியாக காத்திருக்கிறது. அதே நேரத்தில் ஐசிசி நடத்தும் போட்டிகளில் 2 முறை இறுதியில் இந்த 2 அணிகள் மோதி உள்ளன. ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியில் 2000ம் ஆண்டும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2021ம் ஆண்டும் நடந்த 2 ஆட்டங்களிலும் நியூசி தான் வென்றுள்ளது.

* ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஸ் கோப்பை
* இதுவரை 2 ஆட்டங்களில் இரு அணிகளும் மோதி இருக்கின்றன.
* சாம்பியன்ஸ் கோப்பையின் 2வது தொடரில் 2000ம் ஆண்டு இரு அணிகளும் இறுதி ஆட்டத்தில் மோதின. அதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
* அதன் பிறகு 2வது முறையாக நடப்புத் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்த அணிகள் மோதின. அதில் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

* ஐசிசி டி20 உலக கோப்பை
நடப்பு சாம்பியனான இந்தியா 3 முறை நியூசி. அணியுடன் டி20 உலக கோப்பைகளில் மோதி இருக்கிறது. அந்த 3 ஆட்டங்களிலும் நியூசி தான் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் பைனல்
டெஸ்ட் போட்டிக்கான உலக கோப்பையாக கருதப்படும் போட்டியின் இறுதி ஆட்டம் முதல் முறையாக 2021ம் ஆண்டு நடந்தது. லண்டனில் நடந்த அந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி வெற்றி பெற்றது. அதன் மூலம் நியூசி வென்ற முதல் ஐசிசி கோப்பையாக அது அமைந்தது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா தோல்வியை சந்தித்தது.

* கிரிக்கெட் பார்க்க பீச்சுக்கு வாங்க…
இந்தியா-நியூசிலாந்து இடையிலான இறுதி ஆட்டம் சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் அகன்ற திரைகள் மூலம் இன்று ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.

* டாசில் பாஸ் ஆவதே ரோகித்துக்கு டாஸ்க்
இந்த சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா இதுவரை விளையாடி உள்ள 4 ஆட்டங்களின் தொடக்கங்களில் சுண்டப்பட்ட நாணயங்கள்(டாஸ்) கேப்டன் ரோகித்துக்கு சாதகமாக விழுந்ததில்லை. அதுமட்டுமல்ல ஒரு நாள் ஆட்டங்களில் ரோகித் தொடர்ந்து 14வது முறை டாஸ் வெல்லவில்லை. எனவே இந்த 15வது ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன், டாஸ் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்புத் தொடரில் டாஸ் வெல்லாத 4 ஆட்டங்களிலும் இந்தியா வென்று இருக்கிறது. அதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2 ஆட்டங்களில் இந்தியா தோற்றது.

* ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில்…
* மொத்தம் 10 ஆட்டங்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி உள்ளன.
* அவற்றில் இந்தியா 4 ஆட்டங்களில் மட்டுமே வெல்ல, நியூசி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
* 2023ம் ஆண்டு நடந்த அரையிறுதியில் இரு அணிகளும் சந்தித்து இருக்கின்றன. அதில் இந்தியா வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது

The post இறுதிப் போட்டிகளில் தோற்காத நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியனாகுமா இந்தியா? appeared first on Dinakaran.

Tags : India ,New Zealand ,Dubai ,ICC Champions ,Pakistan ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு