×

வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் தேரோட்ட விழா கோலாகலம்

 

மணப்பாறை, மார்ச் 8: வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்னர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரப்பூரில் உள்ள கன்னிமாரம்மன் எனப்படும் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5ம்தேதி வீரமலை அடிவாரத்தில் பொன்னர்-சங்கர் அண்ணன்மார் தங்களை மாய்த்துக்கொண்ட படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்றுமுன்தினம் மாலை வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியகாண்டியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்திருக்க, பூசாரி மாரியப்பன் குடை பிடித்தபடி நின்று வர, அந்த வாகனத்தை பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் சுமந்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் வாகனத்தை பட்டியூர் கொடிக்கால்காரர்கள் வகை ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் சுமந்து வந்தனர்.

வாகனங்களுக்கு முன்பு முரசு கொட்டும் காளை செல்ல, அதைத்தொடர்ந்து கன்னிமாரம்மன் கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களை தொடர்ந்து குதிரை, யானை வாகனங்களும் சென்றன. தொடர்ந்து சின்னபூசாரி கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை ஆகியோர் தங்காள் கரகத்துடன் சென்றனர். மாலை 6.30 மணிக்கு வேடபரி புறப்பட்டு அணியாப்பூர் குதிரை கோயில் சென்று இளைப்பாற்றி மண்டபம் சென்றது.

நேற்று (7ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு இளைப்பாற்றி மண்டபத்திலிருந்து வாகனங்களில் சுவாமிகள் புறப்பட்டு வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலை வந்தடைந்தது. வேடபரி சென்ற வழிநெடுகிலும் பக்தர்கள் பூ மாலைகளை வீசி வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று பகல் 11 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.

பெரியகாண்டியம்மன் கோயில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் அம்மனை வைத்த பின்னர் சாம்புவன் காளை முரசு கொட்டி முன் செல்ல, நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் சென்ற இடங்களில் எல்லாம் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த தானியங்களையும், பக்தர்கள் மலர் மாலைகளையும் அம்மனிடம் வைத்து வணங்கினர். தேரோட்டத்தையொட்டி எஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவை முன்னிட்டு நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் தேரோட்ட விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Veerapur Great Kandiyaman Temple Terota Ceremony Kolakalam ,Manapara ,Kandiyaman ,Veerapur ,Sami ,Tirichi district ,Periyakandiamman Temple ,Kannimaramman ,Weerapur Great Kandiyaman Temple Terota Ceremony Kolakalam ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து உப்பிலியபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்