×

கல்லிடைக்குறிச்சி பகுதியில் நள்ளிரவில் சுற்றித்திரியும் கரடி

*பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்

அம்பை : கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் கரடி, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி வீட்டு வளர்ப்பு மிருகங்களை தாக்குவதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி, பொன்மாநகர், கோல்டன்நகர், ரயில் நிலையம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அயன்சிங்கம்பட்டியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான கரடி உலா வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் அயன்சிங்கம்பட்டி பகுதி மக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் மணிமுத்தாறு, பொட்டல், தெற்கு பாப்பான்குளம் ஆகிய மலையடிவார பகுதிகள் வரை கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து சென்ற நிலையில் தற்போது அயன் சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி வரை கரடி உலா வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

எனவே மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க அகழிகள், சோலார் மின்வேலிகள் அமைத்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை கண்காணிப்பு கேமிரா அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கல்லிடைக்குறிச்சி பகுதியில் நள்ளிரவில் சுற்றித்திரியும் கரடி appeared first on Dinakaran.

Tags : Kallidaikurichi ,Manimutharu ,Ayansingampatti ,South Pappankulam ,Kalakkadu Mundanthurai Tiger Reserve ,Ambasamudram Kottam ,Ambasamudram Forest Reserve… ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...