- கரூர்
- அமலாக்கத் துறை
- சென்னை
- கொங்கு மெஸ் மணி
- கரூர் மாவட்டம்
- நேரம் எம்.சி.எஸ்.சங்கர் (எ) சங்கரானந்த்
- தின மலர்
சென்னை: கரூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கொங்கு மெஸ் மணி. இவர் அரசு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்கிறார். அதேபோல் கரூர் மாவட்டத்தை மற்றொரு தொழிலதிபரான நேரம் எம்.சி.எஸ்.சங்கர் (எ) சங்கரானந்த் என்பவரும் அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணி செய்து வருகிறார். இந்த 2 தொழிலதிபர்களும் தங்களது வருமானத்தை ஒன்றிய அரசுக்கு குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் 2023ல் இந்த தொழிலதிபர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தது தெரியவந்தது. இதற்கு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற காசி என்பவருக்கும் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கிடைத்த ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு அனுப்பினர்.
அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாக விசாரித்தனர். அதில் பல லட்சம் ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நேற்று ஒரே நேரத்தில் கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் கார்த்தி வீடுகளில் தலா 5 அமலாக்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் அரசு ஒப்பந்ததாரரான கரூரில் 80 அடி சாலையில் உள்ள எம்.சி.எஸ்.சங்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக எம்சி.எஸ்.சங்கரின் கருர் மாவட்டம் மாயனூரில் உள்ள அவரது தந்தை சுந்தரம் வீட்டிற்கு 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் நேற்று மதியம் வரை காத்திருந்த அதிகாரிகள் பிறகு சோதனை செய்யாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். அதேநேரம் இந்த தொழிலதிபர்களின் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்கள் கைப்பற்றினர்.
சென்னையில் தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில் உள்ள ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான காசி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை விவரங்கள், அவரது பணிக்காலத்தில் உள்ள வருமானங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஒரேநேரத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீடுகள் என 8க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக கரூர் தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீடுகளில் சோதனை: முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.
