திருவேங்கடம், மார்ச் 5: திருவேங்கடம் அடுத்த உமையத் தலைவன்பட்டியைச் சேர்ந்த வைரமுத்துவின் மனைவி சங்கரேஸ்வரி (46). இவர்களுக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதியர் இருவரும் கடந்த பிப். 28ம் தேதி மாலை 4 மணி அளவில் உமையத் தலைவன் பட்டியில் இருந்து திருவேங்கடத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். வைரமுத்து மொபட்டை ஓட்டிச்சென்றார். திருவேங்கடம் பல்க் அருகே வந்தபோது பலத்த காற்று வீசியது. இதில் எதிர்பாராத விதமாக சங்கரேஸ்வரியின் சேலை மொபட்டின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.
இதில் நிலைகுலைந்த இருவரும் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் சங்கரேஸ்வரியின் தலையில் பலத்த அடி விழுந்தது. இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரேஸ்வரியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ்அளிக்கப்பட்ட முதலுதவியைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பின்னர் நடைபெற்ற உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் சங்கரேஸ்வரியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவேங்கடம் எஸ் ஐ சஞ்சய் காந்தி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
The post திருவேங்கடம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் பரிதாப சாவு appeared first on Dinakaran.
