×

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு: மர்மநபர்கள் கைவரிசை

 

ஈரோடு,மார்ச்4: பெருந்துறையில் கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஈரோடு குமலன்குட்டை செல்லப்பன் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). ஜவுளி கடை ஊழியர். இவரது மனைவி சித்ரா (43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.ராஜேந்திரன் அவரது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக காஞ்சிக்கோவில் மண்டபத்திற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பைக்கில் அவரது மனைவியுடன் சென்றார்.

இவருக்கு பின்னால் ராஜேந்திரன் அண்ணன் கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி பூங்கொடி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். பெருந்துறை காஞ்சிக்கோவில் சாலை எல்லைமேடு பகுதியில் சென்றபோது, கோவிந்தசாமியின் ஸ்கூட்டரில் இருந்த அவரது மனைவி பூங்கொடியிடம் பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் செயின் பறிக்க முயன்றனர். இதில், உஷாரான பூங்கொடி செயினை இருக பிடித்து கொண்டதால் மர்மநபர்கள் செயினை பறிக்காமல் தப்பி வந்தனர்.

தொடர்ந்து மர்மநபர்கள் அதே சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ராஜேந்திரன் மனைவி சித்ராவின் கழுத்தில் இருந்த 5.5 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். இதில், சித்ரா பைக்கில் இருந்து சாலையில் விழுந்தார். இதில், சித்ரா அணிந்திருந்த 5.5 பவுன் தாலி செயினில் தாலியின் முகப்பு மட்டும் சித்ராவிடமும், மீதமுள்ள 5 பவுன் செயின் மர்ம நபர்களிடம் சிக்கியதால் அதை பறித்து கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பினர். கீழே விழுந்தததில் காயம் அடைந்த சித்ராவை, ராஜேந்திரன் மற்றும் பின்னால் வந்த கோவிந்தசாமி, பூங்கொடி ஆகியோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

The post கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு: மர்மநபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai ,Rajendran ,Kumalankuttai Chellappan Gounder Street, Erode ,Chithra ,Dinakaran ,
× RELATED கெஞ்சனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்கம்