ஈரோடு, டிச.23: ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே சாதி பெயரை சொல்லி திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அத்தாணி மாகாளியம்மன் கோயிலைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் அத்தாணி மாகாளியம்மன் கோயிலில் வசித்து வருகிறேன். தற்போது குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) 2ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன். கடந்த 18ம் தேதி, எனது நண்பர்கள் பூபதி மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரை, பொலக்காளிபாளையத்தில் உள்ள பிற சமூகத்தைச் சேர்ந்த சிலர் அடித்து உதைத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து நானும், எனது நண்பர் கார்த்தியும், அப்பகுதிக்கு சென்றோம். அங்கிருந்தவர்கள், பூபதியையும், ரஞ்சித்தையும் கட்டை மற்றும் கம்பியால் மாறி மாறி தாக்கிக்கொண்டிருந்தனர். இதனை தடுக்க சென்ற என்னையும், கார்த்தியையும் அடித்தனர். மேலும், சாதி பெயரை கூறி தகாத வார்த்தைகளால் பேசினர்.
அது மட்டுமின்றி, எங்களை செல்போன் மூலமாக படம் பிடித்து, சமூக வலைதளங்களில் ஆடு திருடர்கள் என பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். இதனால், எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாதி பெயரை சொல்லி திட்டியதோடு, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோன்று, பொலக்காளிபாளையத்தில் உள்ள பிற சமூகத்தினர், தன்னையும், நண்பர் ரஞ்சித்குமாரையும் தாக்கியதாக பூபதியும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
