×

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் திறப்பு

 

சத்தியமங்கலம், மார்ச் 4: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கடந்த ஜனவரி 10ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

ஜனவரி 10 முதல் மே 1ம் தேதி வரை 5 சுற்றுக்களாக இடைவெளி விட்டு தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை குறிப்பிட்ட இடைவெளி விட்டு இரண்டு சுற்று தண்ணீர் விடப்பட்ட நிலையில் மூன்றாம் சுற்று தண்ணீர் நேற்று காலை 8 மணிக்கு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டது.

முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் நீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. படிப்படியாக நீர்திறப்பு 2300 கன அடியாக அதிகரிக்கப்படும் எனவும்,மார்ச் 16ம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 86.91 அடியாகவும், நீர் இருப்பு 19.6 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 800 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 1050 கனஅடி தண்ணீரும், என மொத்தம் 1850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 

The post பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3ம் சுற்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Lower Bhavani Channel ,Sathyamangalam ,Erode district ,Erode ,Tiruppur ,Karur ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது