×

இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மும்பை: 1994 ம் ஆண்டு நடந்த பங்குப் பட்டியல் மோசடியில், இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் (SEBI) முன்னாள் தலைவர் மாதபி பூரி புச், அதன் தற்போதைய முழுநேர இயக்குநர்கள் மூன்று பேர் மற்றும் இரண்டு பி.எஸ்.இ அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பணியகத்திற்கு (ACB) மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாகிறது என்பதால், மாதபி பூரி புச் மற்றும் 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ACB) எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என ஊழல் தடுப்புசிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் செபி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென தானேவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சபன் ஸ்ரீவஸ்தவா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது நீதிபதி கூறுகையில்:
முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், செபி உயர் அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யவேண்டும் என்று தனது உத்தரவில் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஒழுங்கு முறை விதிகள் மீறல், கூட்டு சதி நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பாக நேர்மையான பாரபட்சமற்ற விசாரணை தேவை.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், முன்னாள் மும்பை பங்கு சந்தையின் தலைவர் பிரமோத் அகர்வால், மும்பை பங்கு சந்தையின் தலைமை நிர்வாக இயங்குனர் சுந்தரராமன் ராமமூர்த்தி மற்றும் செபியின் முழு நேர உறுப்பினர்கள் அஸ்வினி பாட்டியா, ஆனந்த் நாராயணன், கம்லேஷ் சந்திர வர்ஷினி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு விசாரணை நடந்த செய்யவேண்டும். இந்த விசாரணையை கோர்ட்டு கண்காணிக்கும் என்றும் 30 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை அதிகமாக காட்டி அதிக கடன்கள் பெறுவது, போலி நிறுவனங்களை துவங்கி வரி ஏய்ப்பு செய்வது போன்ற குற்றங்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதனையடுத்து செபி அமைப்பு விசாரணை நடத்தியது. அப்பொழுது செபியின் தலைவராக மாதபி பூரி புச் இருந்தார்.இதனையடுத்து மீண்டும் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களில் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தாவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madafi Puri Buch ,Stock Exchange Board of India ,MUMBAI ,MARKET BOARD OF INDIA ,SEBI ,MADABI PURI BUCH ,Dinakaran ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்: சென்னையில் 7 விமானங்கள் ரத்து