- பியுஷ் கோயல்
- எடப்பாடி
- பாஜக
- அஇஅதிமுக
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- மத்திய அமைச்சர்
- OPS
- TTV
- பா.ம.க.
- தேமுதிக…
சென்னை: பாஜ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு சென்னை வந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை, எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து சுமார் 2 மணிநேரம் ஆலோசிக்கப்பட்டது. ஓபிஎஸ், டிடிவி, பாமக, தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது குறித்தும் கூட்டத்தில் காரசாரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. ஆனால், வேறு எந்த கட்சிகளும் இந்த கூட்டணியில் இன்னும் சேரவில்லை. சில சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியது. அதில் பாஜ 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த முறை பாஜ 70 தொகுதிகளை கேட்டு 40 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக 70 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து, அதில் 60 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவை வலியுறுத்த உள்ளது.
பின்னர் படிப்படியாக இறங்கி 40 தொகுதிகளில் போட்டியிடுவது, மேலும் 30 தொகுதிகளைப் பெற்று, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வழங்குவது என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தலைநகரான சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை பாஜ கேட்டு வருகிறது. மேலும் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு தலா 3 பேர் வீதம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜ தயாரித்துள்ள தொகுதி பட்டியலுடன் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் டெல்லி சென்றார்.
டெல்லி சென்ற அவர் பாஜ போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்தார். அவரும் அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினார். பாஜவின் இந்த 70 சீட் விவகாரம் என்பது அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் சென்னையில் மட்டும் 8 தொகுதிகளை ஒதுக்கவே முடியாது. மேலும் கடந்த முறை அதிமுக வென்ற தொகுதிகளை ஒதுக்கவே முடியாது என்ற முடிவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறைவான அளவில் சீட் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களை டெல்லி மேலிடம் அண்மையில் நியமித்தது. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பாஜ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக ஒன்றிய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இணைப் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.
தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு வந்தவுடன் அவர்களுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து தமிழக பாஜ மையக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள், பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல், தேர்தல் வியூகம் தொடர்பாகவும், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பியூஸ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினர். அங்கு இருவரையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். எடப்பாடியுடன் அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் இருந்தனர். பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 மணி நேரம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.
பாஜ போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணி பலப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது 60 தொகுதிகளை பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி இவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது. கடந்த முறை ஒதுக்கியதை விட கூடுதலாக 25 இடங்கள் வரை ஒதுக்குவதாக தெரிவித்தார். இதற்கு பாஜவினர் சம்மதிக்கவில்லை. நாங்கள் கேட்ட தொகுதியை ஒதுக்கியே ஆக வேண்டும் என்று கறாராக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி.தினகரன், பாமக, தேமுதிக ஆகியோரை கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதிமுக பல முறை அழைத்தும் கூட்டணிக்கு எந்த கட்சியும் வராததால் இனி இதற்கான பணியில் பாஜவே நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. விஜய் குறித்தும் பியூஸ் கோயல் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்கும் பொறுப்பு பாஜவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆலோசனை கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘அதிமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது’ என்றார். மேலும் பாஜ சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி பதில் தர மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
* கருத்துகளை பரிமாறினோம்: எடப்பாடி பேட்டி
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினோம். தமிழக நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக -பாஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். அதிமுக- பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து திமுக ஆட்சியை அகற்றும். அதற்கான திட்டம் குறித்து பேச்சு நடந்தது. சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்’ என்றார்.
* என்டிஏவுக்கு பன்னீர் டாட்டா
அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முதல் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனையின்போது பேசிய பன்னீர்செல்ம்வம் பலமுறை என்டிஏ கூட்டணிக்காக பேசிவிட்டேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இனி அவர்களை நம்பி பயன் இல்லை. இதனால நாம் திமுக அல்லது தவெக கூட்டணிக்கு செல்வது குறித்து உங்கள் கருத்தை கூறுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த தகவல் பாஜவுக்கு தெரிந்ததால் அவரை எப்படி தங்கள் வழிக்கு கொண்டுவரலாம் என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
* எடப்பாடி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்: ஒன்றிய அமைச்சர் பேட்டி
பேச்சுவார்த்தைக்கு பின்னர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில், ‘‘சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்தோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும்” என்றார்.
