×

வில்லுக்குறியில் டெம்போ டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

 

திங்கள்சந்தை, மார்ச் 1: வில்லுக்குறியை அடுத்த குதிரைப்பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (34). டெம்போ டிரைவர். சம்பவத்தன்று இரவு குதிரைப்பந்திவிளை மரிய மிக்கேல் என்பவரது பெட்டிக்கடை முன்பு ரமேஷ்குமார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (38) என்பவர் மது போதையில் மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து விரட்டியதாக தெரிகிறது.

அவர்கள் அலறியபடி ரமேஷ்குமார் பைக் முன்பு வந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளனர். இதனால் ரமேஷ்குமார் பைக்கை நிறுத்திவிட்டு ராஜகோபாலிடம் ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவதூறாக பேசிய ராஜகோபால் என் மனைவி, பிள்ளைகளை அடிப்பதை தட்டிக்கேட்க நீ யார்? என்று கூறி கையில் வைத்திருந்த அரிவாளால் ரமேஷ்குமாரை மாறி மாறி வெட்டியதாக தெரிகிறது.

இதில் அவருக்கு இடது காது, தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரமேஷ்குமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ராஜகோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வில்லுக்குறியில் டெம்போ டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Tempo ,Villukuri ,Ramesh Kumar ,Kudhirappandivilai ,Maria Mikkel ,Rajagopal ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்