தாம்பரம்: பெருங்களத்தூர், கிருஷ்ணா சாலையை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). இவரது மனைவி கிருத்திகா (40). இவர்கள் இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் கிருத்திகா, வெங்கடேஷை பிரிந்து அதே பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த வெங்கடேஷ் அதிக கடன் தொல்லை மற்றும் மனைவி உடன் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வெங்கடேஷ் அவரது மனைவி கிருத்திகாவுக்கு செல்போனில் எமர்ஜென்சி என குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இதனை தாமதமாக பார்த்த கிருத்திகா பின்னர் இதுகுறித்து அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தை, வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் வெங்கடேஷ் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் தனக்குத்தானே உடம்பில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி உடலில் மின்சாரம் பாய்ச்சி ஐடி ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.
