×

தெலங்கானாவில் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்க 3வது நாளாக மீட்பு குழுவினர் தீவிரம்: கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சிக்கல்

திருமலை: தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே சைலம் அணையில் இடது சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த பணியில் கடந்த 22ம் தேதி சுமார் 50 ஊழியர்கள் ஈடுபட்டனர். 14வது கிமீ தூரத்தில் பணியில் ஈடுபட்டபோது மண் சரிவு ஏற்பட்டது. இதில் 8 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்க முயன்றனர்.

மேலும் இப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 120 பேர், துணை பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர், நிலக்கரி சுரங்க மீட்புக்குழுவைச் சேர்ந்த 35 பேர், ஹைட்ரா குழுவை சேர்ந்த 15 பேர் என மொத்தம் 240 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 3வது நாளாக இப்பணி நடந்து வருகிறது.
மீட்பு குழுவினர் 11.6 கிமீ தூரம் வரை மட்டுமே சுரங்க ரயிலில் செல்ல முடிந்தது. அதன்பிறகு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு நடந்து செல்லும்போது, சில இடங்களில் முழங்கால் வரையும், சில இடங்களில் கழுத்து வரையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்த தண்ணீர் மற்றும் மணல், சேறு ஆகியவை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தண்ணீரின் வேகத்திற்கு ஒரு பெரிய ராட்சத போர்வெல் இயந்திரமும் அடித்து வரப்பட்டு சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளது. மீட்பு படை வீரர்களால் முன்னேறி செல்ல போராடி வருகின்றனர்.

சுரங்கத்தில் சிக்கியவர்களின் பெயரை, மீட்பு குழுவினர் அழைக்கும் நிலையில், எந்தவித சத்தமும் வரவில்லை. எனவே மீட்பு குழுவினர் முழு முயற்சியுடன் பணிகளை மேற்கொண்டாலும் அவர்களை உயிருடன் கொண்டு வர முடியுமா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் ஜுப்பள்ளி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

The post தெலங்கானாவில் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்க 3வது நாளாக மீட்பு குழுவினர் தீவிரம்: கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Sailam dam ,Domalabenta ,Nagar Kurnool district ,Dinakaran ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்