கவுகாத்தி: அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். கவுகாத்தி லோகப்பிரிய கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் அசாமின் முதல் முதல்வர் கோபிநாத் பர்தோலோயின் 80 அடி உயர சிலையைத் திறந்து வைத்து, ரூ.4,000 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார்.
பயணத்தின் 2ம் நாளான நேற்று பிரம்மபுத்திரா நதியில் ‘எம்வி சராய்தேவ் 2’ என்ற 3 அடுக்கு சொகுசு கப்பலில் பயணித்தபடி ‘பரீட்சை பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் 25 மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான அசாம் போராட்டத்தின் 860 தியாகிகளின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும், அசாம் போராட்டத்தின் முதல் தியாகியான கர்கேஷ்வர் தாலுக்தாரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்தார்.
அங்கிருந்து திப்ருகர் மாவட்டத்தில் ரூ. 10,601 கோடி மதிப்பிலான பிரவுன்ஃபீல்ட் அம்மோனியா-யூரியா ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நாம்ரூப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் அசாமில் குடியேற உதவுவதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த 11 ஆண்டுகளாக அவற்றை சரிசெய்த போதிலும், இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
