
நன்றி குங்குமம் தோழி
சம்சுல் ஹீதா பானு
எழுத்தாளர், கவிதாயினி, தொழில்முனைவோர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்களை கொண்டவர் சென்னை, குரோம்பேட்டையில் வசிக்கும் சம்சுல் ஹீதா பானு. ராமநாதபுரம், முதுகுளத்தூரை பூர்வீகமாகக் கொண்டவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இவர் எழுத்துப் பணியில் தனக்கான ஒரு இடத்தினை பிடித்துள்ளார். மேலும் தொழில்முனைவோராக வலம் வரும் இவர் தன் பயணம் குறித்து பகிர்ந்தார்.
‘‘நான் ஆறாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். காரணம், எங்க சமூகத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பது குறைவு. நான் அதிகமாக படிக்கவில்லை என்பதால், என் மகளை பெரிய அளவில் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதனால் நாங்க குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். என் மகளின் மனதில் சிறுவயது முதலே நீ கண்டிப்பாக மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நான் வளர்த்து வந்தேன். அவளின் படிப்பு மற்றவர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு படி என நானும், என் கணவரும் அவளை ஊக்குவித்து வந்தோம். அவளும் நன்றாக படித்தாள். தற்போது மயக்கவியல்
மருத்துவராகி பணி செய்து வருகிறார்.
எழுத்துப் பணி…
என்னால் பாடப் புத்தகங்களைதான் படிக்க முடியவில்லை. ஆனால் படிக்கும் பழக்கத்தை நான் கைவிடவில்லை. கதை, கட்டுரை, கவிதைப் புத்தகங்கள் எல்லாம் வாசிப்பேன். அதில் என்னைப் பாதிக்கக் கூடிய வரிகள், மனதில் நிலைத்து நிற்கும் எழுத்துக் கோர்வையினை ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்வேன். அதை மீண்டும் வாசித்து பார்ப்பேன். அப்போது என்னுள் எழுகின்ற எண்ணங்கள் வேறு விதமாக அமையும். அதை ஒரு கட்டுரையாக எழுதுவேன்.
எழுதிய கட்டுரைகளை பத்திரப்படுத்தி வைத்தேன். என் மகள் பள்ளியில் படிக்கும் போது பேச்சுப்போட்டியில் எல்லாம் கலந்துகொள்வாள். அவள் பேசும் தலைப்புக்கு ஏற்ப இலக்கியம், சமூகம், பெண் கல்வி, பெண்ணுரிமை போன்ற கட்டுரைகளை எழுதிக் கொடுப்பேன். அந்த அனுபவம் நான் எழுதி பத்திரப்படுத்தி வைத்திருந்த கட்டுரை மூலம்தான் எனக்கு கிடைத்தது. நான் எழுதிக் கொடுக்கும் கட்டுரைகளை அவள் பேச்சாக மாற்றி மேடையில் உரை நிகழ்த்தி பல பரிசுகளை பெற்றிருக்கிறாள்.
அவளின் பேச்சுத் திறனைப் பார்த்து என் தோழிகள் மற்றும் உறவினர்கள் தங்களின் பிள்ளைகளுக்கும் எழுதித் தரச்சொல்லி கேட்டார்கள். அந்த எழுத்துக்கள்தான் எனக்குள் தனிப்பட்ட தன்னம்பிக்கையை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பத்திரிகை, மாத இதழ், மின்னிதழ் ஆகியவைகளுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதத் துவங்கினேன். என்னுடைய கட்டுரைகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. அது எனக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தித் தந்தது.
‘தாயில்லாமல் நான்’, ‘நாலு பேருக்கு நன்றி’ என இரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். தற்போது மாத இதழ் ஒன்றில் ‘கிராமத்து சித்திரங்கள்’ என்ற தலைப்பில் மாதந்தோறும் ஒரு சிறுகதை எழுதி வருகிறேன். அதுபோல ‘சாதனைப் பெண்கள்’ என்ற தலைப்பில் 13 பெண்களைப் பற்றி நான் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் நூலாக வரவுள்ளது. ஒரு நாவலும் தயாரான நிலையில் உள்ளது.
தொழில்முனைவோர் என்ற அடையாளம்…
நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்திகளை பார்க்க நேரிடும். அவர்கள் அந்த முடிவினை எடுக்க கடன் தொல்லைதான் பெரும்பாலான காரணமாக இருந்தது. அதன் பின்னணியை ஆராய்ந்துப் பார்க்கும் போது கணவர் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில் இருந்திருப்பார். இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒருவரின் சம்பாத்தியம் கொண்டு குடும்பத்தை நகர்த்துவது என்பது மிகவும் சவாலாகத்தான் இருக்கிறது.
அதற்காக பெண்கள் படித்து வேலைக்குதான் போக வேண்டும் என்றில்லை. காரணம், பட்டப்படிப்பு முடித்திருக்கும் இல்லத்தரசிகளுக்கு நிறுவனத்தில் வேலை கிடைப்பது சிரமம். அப்படிப்பட்ட பெண்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன். என் மூலம் அவர்களுக்கு ஒரு சம்பாத்தியம் கிடைக்க ஏற்பாடு செய்ததுதான் என்னுடைய ‘ஹீதா ஹெல்த்கேர்’ நிறுவனம்.
இதில் கர்ப்பிணிகளுக்கான ஹெல்த் மிக்ஸ், குளியல் பொடி, பீட்ருட் ஊட்டச்சத்து மாலட், புளியோதரை, கோங்குரா, மல்லி, பூண்டு, வத்தக்குழம்பு, லெமன், பிரண்டை, வஞ்சிரக் கருவாடு, மாசிக் கருவாடு. இறால் ஆகியத் தொக்குகளும், மூலிகைப் பற் பொடி, முடக்கத்தான் ரசப் பொடி, மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், புளிக்குழம்பு மசாலா போன்ற 50-க்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரிக்கிறோம். தற்போது என்னிடம் 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கிறார்கள். பெண்களுக்கு என் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பினையும், மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் முடிந்த சமூக சேவைகளும் செய்து வருகிறேன்.
நீங்கள் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும்…
பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் மறக்க முடியாத சில விருதுகள் உண்டு. அதில் பாரீஸ் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதியாரின் பிறந்தநாள் விழாவில் கவிதைப் போட்டியில்
முதலிடம் பெற்று விருது பெற்றேன். தமிழக அரசு நடத்திய உலக மகளிர் தின கட்டுரைப் போட்டியில் வென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பாராட்டப்பட்டு விருதும் பெற்றேன். ‘கலாம் நம்பிக்கை விருது’, ‘எக்சலன்ஸ் விருது’ போன்ற விருதுகள் என்னை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவும், ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தது.
எழுத்து மூலமாக பெண்களுக்கு சொல்ல நினைக்கும் கருத்துகள்…
ஒரு பெண் தன் குடும்பத்தில் பல வேலைகளை திறம்பட செய்கிறாள். ஆனால், தன் உடல் மேல் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மதிய நேரங்களில் வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவு வகைகளை பரிமாறி விட்டு தான் சாப்பிடும் போது, பிற்பகலாகிவிடும். மதிய உணவு சாப்பிட தாமதமாகும் போது மோர் அல்லது பழச்சாறு போன்றவற்றை சாப்பிட்டு பிறகு மற்ற வேலைகளை பார்க்கலாம் என்று அவர்கள் சிந்திப்பது இல்லை. அன்று சரியான நேரத்தில் சாப்பிட தவறியதை, தனக்கென்று உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் போதுதான் உணர்கிறாள். பெண்கள் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சில பெண்கள் அலுவலகங்களில் இரவு நேர பணிகளை முடித்துவிட்டு வரும் போது, அவர்களை தவறாக எண்ணுபவர்கள் அவளின் நடத்தைப் பற்றி கேலி செய்கின்றனர். இதற்கு நாம் எப்போதும் தலை சாய்க்கவே கூடாது. இதைப் பற்றி பெண் எழுத்தாளர்களான நாங்களே எவ்வளவு காலம்தான் பேசிக் கொண்டு இருப்பது. ஆண் எழுத்தாளர்கள், கவிஞர்கள்தான் இதனை அதிகமாக எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டும். ஒரு பெண்ணைப் பற்றி பெண் எழுதுவதைவிட சோதனைகளை உண்டாக்கும் ஆணாதிக்க சமூகம் அதனைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். மாற்றமும் ஏற்படும்.
குடும்பம், தொழில், எழுத்து… ஒரே நேரத்தில் எப்படி சமாளிக்கிறீர்கள்?
குடும்பப் பணிகள் மிகவும் முக்கியமானது. அதனை உடனே செய்ய வேண்டும். அது போல குடும்பத்தில் கூட்டாக இணைந்து அனைவரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் உணவு, உடல்நலம், மருத்துவம் என கவனித்துக் கொள்ள வேண்டும். தொழிலில் பணியாளர்களுக்கான பணிகளை அவர்கள் பொறுப்புடன் செய்யும் படி அரவணைத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக திடீரென்று நாம் வெளியில் புறப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்த நேரத்தில் பதற்றம் அடையாமல், பணியாளர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தால், அவர்கள் தங்களின் சொந்த பணி போல எடுத்து செய்வார்கள்.
எழுத்து, வாசிப்பு ஆகியவற்றுக்கு இரவில் எப்போதும் இரண்டு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அது போல போனில் வரும் நல்ல தகவலையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பம், பணி, எழுத்து மூன்றையும் தினந்தோறும் செய்வது சுலபமாகிவிடும் என்றார் சம்சுல் ஹீதா பானு.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்
The post இல்லத்தரசிகளின் நலனுக்காக தொழில்முனைவோராக மாறினேன்! appeared first on Dinakaran.
