×

சேலம் அருகே பயங்கரம்; 2 குழந்தைகள் ெவட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர், மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், ஆட்டோ டிரைவர், அவரது மனைவி, மகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவரது மனைவி தவமணி (38). தம்பதிக்கு விஜயதாரணி (13), அருள்குமாரி (10) என்ற 2 மகள்களும், அருள்பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர். விஜயதாரணி, கூடமலை அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பும், அருள்குமாரி 6ம் வகுப்பும், அருள்பிரகாஷ் 1ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அசோக்குமார், அவரது அண்ணன் ராஜ்குமாருடன் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அசோக்குமார் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் விஜயதாரணி, அருள்பிரகாஷ் ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையிலும், அசோக்குமார், தவமணி, அருள்குமாரி ஆகியோர் உடலில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய நிலையிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை போலீசார் கைப்பற்றினர். இதையறிந்த மாவட்ட எஸ்பி கவுதம்கோயல், ஆத்தூர் டிஎஸ்பி சத்தீஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணையை முடுக்கி விட்டனர்.

தொடர்ந்து காயமடைந்த அசோக்குமார், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கும், தவமணி, அருள்குமாரி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விஜயதாரணி, அருள்பிரகாஷ் ஆகியோர் உடல்கள், பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாரின் தந்தை பெரியசாமிக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை விற்று பணம் தருமாறு தந்தையிடம் அசோக்குமார் கேட்டுள்ளார். அதற்கு பெரியசாமி மறுத்துள்ளார். தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அசோக்குமார், ‘நிலத்தை விற்று பணம் தராவிட்டால் விஷம் குடித்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இந்நிலையில்தான், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. அசோக்குமார் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் மதுபோதையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், சொத்து தகராறில் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.

The post சேலம் அருகே பயங்கரம்; 2 குழந்தைகள் ெவட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர், மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Salem ,Kengavalli ,Asokumar ,Gandhinagar ,Salem district ,Thamani ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை