×

பழைய நகைகளை புதிதாக மாற்றித்தருவதாக ரூ.45 சவரன், ரூ.8 லட்சம் ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் கைது

பெரம்பூர்: புழல் எம்.எம்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி (57). இவர் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த மகா ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் நகை வாங்குவது, நகைகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதன்பேரில் அந்த கடை உரிமையாளரான சரவணகுமார் (42) என்பவர் பழக்கம் ஆகியுள்ளார். பின்னர், வரலட்சுமி தன்னிடம் இருந்த 45 சவரன் நகைகளை புதிதாக மாற்றுவதற்காக மகா ஜூவல்லர்ஸ் கடை உரிமையாளர் சரவணகுமாரிடம் கொடுத்துள்ளார். இதற்காக, ரூ.8 லட்சமும் கொடுத்துள்ளார். அதன் பிறகு சரவணகுமார் நகைகளை மாற்றித் தருவதாக கூறி தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் நகைகளை உருக்கும்போது சேதாரம் அதிகமாகி விட்டது. இதனால் எனக்கு நஷ்டமாகிவிட்டது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எப்படியாவது உங்களது நகைகளை கொடுத்து விடுகிறேன், எனக் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 வருடத்திற்கு முன், நகைக்கடை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி அவர் கடையை மூடி விட்டார். இருந்தபோதும் தொடர்ந்து வரலட்சுமி, சரவணகுமாரிடம் நகைகளை கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி சரவணகுமார் மீது திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார், சரவணகுமாரை அழைத்து விசாரணை நடத்தியபோது, எப்படியாவது கடன் வாங்கி நகைகளை கொடுத்து விடுகிறேன், எனக்கூறி வந்துள்ளார். ஆனால் பேசியபடி அவர் நகைகளை தராததால் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பழைய நகைகளை புதிதாக மாற்றித்தருவதாக ரூ.45 சவரன், ரூ.8 லட்சம் ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Varalakshmi ,M.M. Palayam ,Puzhal ,Maha Jewellers ,Perambur Paper Mills Road ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது