திருவள்ளூர்: திருவள்ளூரில் விசிக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், பல ஆண்டுகளாக நடுநிலையாக செயல்பட்ட ஊடகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜ அரசை விமர்சித்து, பிரதமர் மோடியை விமர்சித்து வெளியிடப்பட்ட கேலி சித்திரத்தின் அடிப்படையில் இணையம் முடக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடக்கம் தொடர்பான எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. இதுபோன்று நடக்கும்போது சம்பந்தப்பட்ட ஊடகத்திற்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கையாளாமல் நேரடியாக இணையம் முடக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இது ஒரு பாசிச நடவடிக்கையாக பார்க்கிறோம்.
ஊடகங்களில் நடுநிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில், ஊடகங்களில் பணியாற்றுபவர்களை கூட பாஜவிற்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே தனியார் வார பத்திரிகை இணையத்தை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை தராமல் இருப்பது ஜனநாயக விரோதமானது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டு அரசுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை என்ற போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது என்றார். அப்போது மாநில நிர்வாகிகள் பாலசிங்கம், நீலவானத்து நிலவன், மாவட்டச் செயலாளர்கள் தளபதி சுந்தர், அருண் கௌதம், நிர்வாகிகள் செந்தில் ஈசன் எட்டி, ராபின், திலக், சதீஷ், நித்யா, ஏழுமலை, குட்டி உட்பட பலர் உடனிருந்தனர்.
The post கல்வித்துறைக்கு நிதி தராதது ஜனநாயக விரோதப்போக்கு: ஒன்றிய அரசு மீது எம்எல்ஏ சாடல் appeared first on Dinakaran.
