×

பாஜவுடன் உறவு இருப்பதால்தான் நடிகர் விஜய் கேட்காமலேயே பாதுகாப்பு வழங்கி உள்ளனர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

தாம்பரம்: சென்னை குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நண்பர்கள் அறப்பணி மன்றம் சார்பில், ‘’போதை இல்லாத தமிழகம்’’ என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதற்கு மன்றத்தின் தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். சிறுவர்கள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை அடைந்தனர். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம், 5 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் என ஊக்க தொகையுடன் கோப்பை, மெடல், சான்றிதழ்கள் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதன்பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டி; தமிழக மக்களிடையே போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருட்கள் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி இளைஞர்கள் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். இது கடந்த 10 வருடத்தில் ஆரம்பித்தது. அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஞ்சா பிடிக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது, பிஜேபியும் அவரும் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். அவர் இன்னும் களத்திற்கே வரவில்லை. அவர் கேட்காமலேயே ஒன்றிய அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்குகிறது என்றால் என்ன அர்த்தம். பாஜவுக்கும் தவெகவிற்கும் உறவு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.இவ்வாறு அமைச்சர் கூறினர். இந்த நிகழ்ச்சியில் இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் திருநீர்மலை த.ஜெயக்குமார், செம்பாக்கம் இரா.சுரேஷ், குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசேகர், தாம்பரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன் கலந்து கொண்டனர்.

The post பாஜவுடன் உறவு இருப்பதால்தான் நடிகர் விஜய் கேட்காமலேயே பாதுகாப்பு வழங்கி உள்ளனர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijay Ketkamele ,Minister Tha ,Anbarasan ,Tambaram ,Friends Charity Forum ,Chrompet ,Chennai ,Tamil ,Vijay Katkamele ,Baja ,Minister Tha. Mo. Anbarasan ,
× RELATED வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல...