×

மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான் ஒன்றிய அரசு நிதி கிடைக்குமா?: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டின் 4ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் ஆக மொத்தம் ரூ.2401 கோடி ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) வழங்கப்படும் நிதியுதவி பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாரணாசியில் செய்தியாளர்கள் , தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது தொடர்பாக கேட்டபோது, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும்போது தமிழகம் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துகு நிதி ஒதுக்க முடியாது” என்று ஆணவமாக தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

தேசியக் கல்விக் கொள்கையில் முன்மொழித் திட்டத்தை ஒன்றிய அரசு திணிப்பதால் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. பேரறிஞர் அண்ணா கொண்டு வரப்பட்ட இரு மொழித் திட்டம் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும். இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான் ஒன்றிய அரசு நிதி கிடைக்குமா?: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU government ,Waiko ,Chennai ,Secretary General ,Wiko ,Union Government ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…