
கும்ப ராசிக்காரர்கள் ஊருக்கு உழைக்கப் பிறந்தவர்கள் என்றாலும், தங்களுடைய சொந்த வாழ்வில் மிகுந்த சுயநலம் சார்ந்த திட்டங்களைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் காதலைத் தங்களுக்குள்ளேயே நீண்ட காலமாக வைத்திருந்து, பின்பு வெளிப் படுத்துவார்கள். காதலிக்கும் போதே பேரன் பேத்தி வரை திட்டமிடுவார்கள்.
காதலுக்கு ஒரு pre plan
காதலில் நேர்மையும் ஆழ்ந்த பற்றும் உடையவர்கள். ஏனோதானோ என்று இவர்கள் எதையும் செய்வது கிடையாது. நன்கு திட்டமிட்டு சில பல செயல் திட்டங்களை கையில் வைத்துக் கொண்டுதான் காதலில் இறங்குவார்கள்.
பொருத்தமான ராசிகள்
கும்ப ராசியினருக்கு மிகப் பொருத்தமான ஜோடி எது என்று கேட்டால், மிதுன ராசியைக் கூறலாம். துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களும் இவர்களோடு இணங்கிப் போவார்கள். தனுசு ராசியினரின் கெடுபிடிகள், கும்ப ராசியினரிடம் செல்லுபடி ஆகாது. துலாம் ராசியினரின் நியாய தர்மங்களும், கும்ப ராசியினர் இடம் எடுபடாது. இவ் இரு ராசிகளும் கும்ப ராசியினருடன் இணக்கமாக இருக்குமே தவிர, அதிகாரமாக வாய்ச்சவடால் எடுபடாது. இந்த மூன்று ராசியினரும் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, பிள்ளை, சகோதரன், சகோதரி, மகள், மருமகன், மருமகள் என்று இருந்தால் அந்தக் குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போலத் திகழும்.
பொருத்தமில்லாத ராசி
கும்ப ராசியினருக்குப் பொருந்தாத ராசி என்றால், ரிஷபத்தைக் கூறலாம். ரிஷபத்தின் அழுத்தமான குணமும் அமைதியான செயல்பாடும் கும்ப ராசியினரைக் குழப்பிவிடும். அவர்களுக்கு கிறுக்குப் பிடிக்க வைத்துவிடும். ஏனென்றால், ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் முடிவுகளை யாரிடமும் விளக்கிச் சொல்ல மாட்டார்கள். முடிவுகளைத் தெரிவிப்பார்கள். அவ்வளவுதான். ஏன் எதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது புரியாமல் கும்ப ராசியினர் குழம்பிப் போவார்கள். கும்ப ராசியினரின் கருத்துக்களுக்கு ரிஷப ராசிக்காரர்கள் செவி கொடுக்க மாட்டார்கள். சொன்னதை செய் நீ… என்ற கட்டளைதான் பிறக்கும்.
கடல் போன்ற காதல்
கும்ப ராசியினர், தனக்கு விருப்பம் உண்டு விருப்பம் இல்லை என்பதை நாசுக்காக தெரிவிப்பார்கள். தேங்காய் உடைப்பது போல பட் என்று உடைத்து இசைய மாட்டார்கள். ஆனால், தன் இணையரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் இவருக்கு நிகர் இவரே. இவர்களின் காதல் வாழ்க்கை குதூகலமாகவும் கொண்டாட்டமாகவும் இல்லாவிட்டாலும் ஆழ்கடலை போல அமைதியாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும். கடல் அளவுக்குப் பெரியதில்லை என்றாலும், ஆழமான அடக்கமான ஆர்ப்பாட்டம் இல்லாத காதல்.
சுதந்திரமான காதல்
கும்ப ராசி பெண்களும், ஆண்களும் காதலுக்கு அடிமைப்பட்டவர்கள், கட்டுப்பட்டவர்கள் கிடையாது. காதலை ஜெயித்தவர்கள், தங்களுடைய சுதந்திரத்தை எந்த நிலையிலும் விட்டுத் தராமல் காதலிப்பார்கள். கும்ப ராசியினர், தன் வாழ்க்கைத் துணையோடு தொண்ணூறு சதவீதம் இணங்கிச் செல்வார்களே தவிர, பிணங்கிக் கொள்ள மாட்டார்கள். காதலரை மற்றும் வாழ்க்கைத் துணையை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்.
இலக்கும் ஈர்ப்பும்
கும்ப ராசியினர் அறிவுக்கூர்மையும் செயல் திறனும் உடையவர்களுடன் சேர்ந்து இருக்க விரும்புவார்கள். இவர்களிடம் நட்பும் காதலும் கொள்வார்கள். இவர்களுக்கு இலக்கு முக்கியமே தவிர அதனை அடையும் வழிகள் முக்கியமில்லை. வெற்றி என்ற ஒரே குறிக்கோளை நோக்கி பயணப்படும் கும்ப ராசியினர், தர்ம நியாயங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. காதல் மற்றும் திருமணத்திலும் இப்போக்கை இவர்கள் கடைப்பிடிப்பார்கள்.
காதல் தோல்வி
கும்ப ராசி ஆண்களுக்கும் பெண்களுக்கும் காதல் தோல்வி பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எதனால் இந்த பிரேக் அப் ஏற்பட்டது என்று அது குறித்து ஒரு பகுப்பாய்வு செய்வர். பின்பு அடுத்த முறை நாம் காதலிக்கும்போது இந்த பிரச்னைகள் வரக்கூடாது என்று முடிவு செய்வர். மற்றவர்களுக்கு காதல் அட்வைஸ் வழங்குவதில் கெட்டிக்காரர்கள். கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பெரும்பாலும் காதல் தோல்வி ஏற்படாது. அப்படியே இவர்கள் ஒருவேளை பிரிந்து செல்ல நேரிட்டாலும் அது இவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்ட உயர்வுக்கு கொண்டு போவதாக இருக்குமே தவிர இவர்களின் வாழ்க்கையை ஸ்தம்பித்து விடச் செய்யாது.
அழகு, அந்தஸ்து முக்கியமில்லை
கும்ப ராசியினர் வாழ்க்கைத் துணையின் அழகு, வயது, இளமை, நாகரீகம், கவர்ச்சி, அந்தஸ்து பற்றி கவலை இல்லை. இவற்றிற்கு இவர்கள் மயங்குவதில்லை. தனது எதிர்கால வாழ்க்கைக்கு, தனது தொழிலுக்கு, தன் குடும்பத்துக்கு, தன் நிம்மதிக்கு உதவக் கூடியவராக இருப்பாரா என்றுதான் ஆராய்ந்து வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் வயதான பெண்கள், அழகில்லாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சமூக அந்தஸ்தில் இவர்களைவிட கீழான குறைந்த நிலையில் இருக்கும் பெண்கள் ஆகியோரை கூட தன் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று கருதினால் காதலித்து மணந்து கொள்வார்கள். பெண்களும் அப்படித்தான். சில ஆண்கள் இரண்டாவது மூன்றாவது கணவராகப் போகவும் தயாராய் இருப்பார்கள்.
காதலால் உயர்வு பெறுவர்
கும்ப ராசியினரின் தனது வாழ்க்கை துணையால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். மேலும், பொருளாதார உயர்வைச் சந்திப்பவராகவும் சமூக அந்தஸ்தில் உயர் நிலையை அடைபவராகவும் விளங்குவது உறுதி. கும்ப ராசிக்காரரால் அவருடைய வாழ்க்கைத் துணையும் நல்ல உயரத்தை எட்டுவர். இருவரும் வாழ்க்கையை பிசினஸ் அக்ரிமெண்ட் போலவே பார்ப்பார்கள். திருமணம் செய்யும் போது எழுத்தர் பணியில் இருப்பவர்கூட திருமணத்திற்குப் பிறகு துணை மேலாளர், உயர் நிர்வாகி என்று பதவி உயர்வு பெறும் வகையில் கும்ப ராசிக்காரர் நல்ல ஆலோசனைகளை வணங்கி தன் வாழ்க்கைத் துணையை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவார்.மொத்தத்தில் கும்ப ராசிக்காரருக்கு காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் உயர்வுக்கு வழி வகுக்கும்.
The post கும்ப ராசியினரின் காதலும் திருமணமும் appeared first on Dinakaran.
