- ஓ.பி.சி., எஸ்.சி.-எஸ்.டி.
- யூனியன் அரசு
- மதுரை
- பாராளுமன்ற உறுப்பினர் சு.
- வெங்கடேசன்
- மதுரை மார்க்சிஸ்ட்
- Su.Venkatesan
- தின மலர்
மதுரை: ஒன்றிய அரசின் ஐஐடிகளில் முனைவர் படிப்பில் ஓபிசி, எஸ்சி – எஸ்டி மாணவர்களின் 590 இடங்களை பறித்து, இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்காததற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ்சி – எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன்.
இதற்கான பதிலை கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜூம்தார் நாடாளுமன்றத்தில் தந்துள்ளார். நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6,210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,484 பேர் எஸ்சி – எஸ்டி, ஓபிசி மாணவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விபரங்களை, பிரிவு வாரியாக, துறைவாரியாக, நிறுவன வாரியாக அமைச்சர் தரவில்லை.
முழு விவரங்களை தருவது இடஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால், அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படாதது அம்பலத்திற்கு வந்துள்ளது. 6,210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2,484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40 சதவீதம் மட்டுமே வருகிறது. ஓபிசி 27 சதவீதம், எஸ்சி 15 சதவீதம், எஸ்டி 7.5 சதவீதம் என்றால் மொத்தம் 49.5 சதவீதம் இடங்கள் இடஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும்.
இதன்படி, 590 இடங்களை எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இடஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொதுவெளிக்கு தெரிய வரும். நாடாளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.
* ‘முதல்வருக்கு வாழ்த்துகள்’
சு.வெங்கடேசன் எம்பி தனது மற்றொரு எக்ஸ் தள பதிவில், ‘‘நகர்புறத்தில் குடியிருக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா, நகர்புற ஏழைகளின் பல பத்தாண்டு கால கனவு நனவாகிறது. நகர்புற விதிகள் என்ற பெயரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலிருந்த அநீதி முடிவுக்கு வருகிறது. எண்ணற்ற போராட்டங்களால் தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடுகின்றன. அமைச்சரவையின் சிறப்புமிக்க முடிவுக்காக தமிழ்நாடு முதல்வருக்கு வாழ்த்துகள்’’ என கூறியுள்ளார்.
The post ஒன்றிய அரசின் ஐஐடி முனைவர் படிப்பில் ஓபிசி, எஸ்சி-எஸ்டி மாணவர்களின் 590 இடங்கள் பறிப்பு: இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்காதது அம்பலம் appeared first on Dinakaran.
