×

பல ஆண்டுகள் பராமரிப்பின்றி செடி, கொடிகளால் சூழ்ந்துள்ள நாரணம்பேடு ஊராட்சி குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

புழல்: நாரணம்பேடு கிராமத்தில், பல ஆண்டுகள் பராமரிப்பின்றி செடி கொடிகளால் சூழ்ந்துள்ள ஊராட்சிக்கு சொந்தமான குளத்தினை தூர்வாரி சீரமைத்து, சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாரணம்பேடு கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த, குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் செடி, கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.

இதனால், இங்கிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு வருவதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர்கள் அமைத்து குளத்தை சரி செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களுக்கு நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட சோழவரம் ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சீர்படுத்த வேண்டும் என நாரணம்பேடு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, கிராம மக்கள் கூறுகையில்; ஊராட்சிக்குச் சொந்தமான இந்தக் குளம் தற்போது பராமரிப்பின்றி செடி கொடிகள் வளர்ந்துள்ளது. இதில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படாததால், ஒரு சிலர் குளத்தில் கழிவுப் பொருட்களை கொட்டி வருவதாலும், குளத்தில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதாலும் நாங்கள் தினசரி இரவு நேரங்களில் அவதிப்படுகிறோம். குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி சுற்றுசுவர் அமைக்க வேண்டும். இல்லையெனில், படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளம் இருந்த இடம் தெரியாமல் வரும் காலத்தில் ஏற்பட சூழ்நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட சோழவரம் ஊராட்சி நிர்வாகம், உடனடியாக குளத்தில் சூழ்ந்துள்ள செடிகொடிகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

The post பல ஆண்டுகள் பராமரிப்பின்றி செடி, கொடிகளால் சூழ்ந்துள்ள நாரணம்பேடு ஊராட்சி குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Naranampedu Panchayat ,Puzhal ,Naranampedu ,Cholavaram panchayat ,Dinakaran ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...