×

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா: லட்சுமி பங்காரு அடிகளார் ஜோதியை ஏற்றி வைக்கிறார்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா இன்று மாலை கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஜோதியை ஏற்றி வைக்க உள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழா கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.
இதில் பல லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து கொண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி செலுத்தி வந்தனர்.

இதில் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் இரு முடி செலுத்தினார். இந்நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தைப்பூச ஜோதி விழாவானது நேற்று காலை மங்கல இசை முழங்க ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலச விளக்கு வேள்வி பூஜையினை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார். அன்னதானத்தினை ஆன்மிக இயக்க தலைமை செயல் அதிகாரி அகத்தியன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தைப்பூச தினமான இன்று காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மேலும், 11 மணி அளவில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் அன்னதானத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன் படி 4.30 மணி அளவில் தைப்பூச ஜோதி ஊர்வலத்தை துணைத் தலைவர் அன்பழகன் தொடங்கி வைக்க உள்ளார். இதில் பாரம்பரிய கிராமிய நிகழ்ச்சிகளுடன் ஜோதி ஊர்வலமானது மேல்மருவத்தூரில் முக்கிய வீதிகளில் நடைபெற உள்ளது.

அன்று மாலை 6 மணி அளவில் பொறியியல் கல்லூரி மைதானத்தில் ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன், வருமானவரித்துறை துணை ஆணையர் நந்தகுமார், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தைப்பூச ஜோதியினை ஏற்றி வைக்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் அன்னதானத்தினை இயக்கத் துணைத்தலைவர் உமாதேவி ஜெய்கணேஷ் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க ஈரோடு மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் இயக்கபொறுப்பாளர்களும், பக்தர்களுக்கும் செய்திருந்தனர்.

The post ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா: லட்சுமி பங்காரு அடிகளார் ஜோதியை ஏற்றி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Thaipusam Jyothi festival ,Adiparasakthi Siddhar Peetham ,Lakshmi ,Bangaru Adikalar ,Madhurantakam ,Melmaruvathur Adiparasakthi Siddhar Peetham ,Lakshmi Bangaru Adikalar ,Sakthimalai Irumudi festival ,Melmaruvathur Adiparasakthi Siddhar Peetham… ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்