இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய இம்ரான் கான் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்தாண்டு பிப்ரவரி 8ம் தேதி பொதுதேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான 133 இடங்களை பெறவில்லை. இதையடுத்து நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களை வென்ற நிலையில், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டன.
இதையடுத்து நவாஸ் ஷெரீபின் சகோதரர் பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இம்ரான் கான் கட்சி சார்பில் ஓமர் அயூப் கான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 336 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 201 வாக்குகளை பெற்று ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்தாண்டு மார்ச் 4ம் தேதி பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் 2ம் முறையாக பதவி ஏற்றார். இந்நிலையில் இந்த பொதுதேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டியது.
இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் நடந்த பிப்ரவரி 8ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடிக்க வலியுறுத்தி இம்ரான் கான் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி கைபர் பக்துன்க்வா மாகாண தலைநகர் ஸ்வாபியில் பாகிஸ்தான்-தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பிப்ரவரி 8ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய இம்ரான் கான் கட்சியினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
The post தேர்தல் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியினர் அதிரடி கைது appeared first on Dinakaran.
