விருத்தாசலம், பிப். 6: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து எடையூர் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எடையூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை மணவாளநல்லூரைச் சேர்ந்த பாபு (50) ஓட்டிச் சென்றார். எடையூரை சேர்ந்த சுப்பிரமணியன் (56) நடத்துனராக பணியில் இருந்தார். விருத்தாசலம் அருகில் உள்ள கோமங்கலம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை பேருந்துக்குள் ஏறுமாறு கண்டக்டர் சுப்ரமணியன் கூறியுள்ளார். இதற்கு அவர்கள் ஏற மறுத்ததுடன் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர்கள், கண்டக்டரை தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து ஓட்டுநர் பாபு தட்டிக் கேட்டபோது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் அங்கு போலீசார் சென்று அந்த மாணவர்களை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 3 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பேருந்து இயக்காமல் அங்கேயே நின்றதால் பயணிகள் அனைவரையும் இறக்கி மாற்று பேருந்தில் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
The post விருத்தாசலம் அருகே பரபரப்பு அரசு பேருந்து டிரைவர், கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

