×

4வது டி.20 போட்டியில் வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்தியா; சிவம் துபே, ஹர்திக் அனுபவத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீட்டனர்: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

புனே: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் 4வது போட்டி நேற்றிரவு புனேவில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 30 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 52, சிவம் துபே 34 பந்தில், 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 53, ரிங்குசிங் 30 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் 26 பந்தில் 51, பென் டக்கெட் 19 பந்தில் 39, பில்சால்ட் 23 ரன் எடுக்க மற்றவர்கள் சொ்ற்ப ரன்னில் அவுட் ஆகினர். 19.4 ஓவரில் அந்த அணி 166 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 15 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய பவுலிங்கில் ரவி பிஷ்னோய், ஹர்சித் ரானா தலா 3, வருண்சக்ரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினர். ஷிவம் துபே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், “அணியில் அனைத்து வீரர்களும் வெற்றிக்கு சிறந்த பங்கை அளித்தனர். ரசிகர்களும் எங்களுக்கு உறுதுணையாக நின்றனர். ஒரே ஓவரில் 3 விக்கெட் இழந்ததெல்லாம் ரொம்ப தவறு. ஆனால் மற்ற வீரர்கள் பாசிட்டிவாக இருந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிவம் துபே, ஹர்திக் இணைந்து அனுபவத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீட்டனர். இதை தான் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். வலைப்பயிற்சியில் பேட் செய்வது போல் களத்திலும் விளையாடி ரன் சேருங்கள். இந்த தொடருக்காக சிறப்பான முறையில் பயிற்சி செய்தோம். அதை போட்டியிலும் இதை வெளிப்படுத்தினோம். வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அணியாக சரியான திசையை நோக்கி செல்கிறோம். ஹர்ஷித் ரானா 3வது வேகப்பந்துவீச்சாளராக வந்து எங்கள் வேலையை அபாரமாக முடித்து விட்டார். அவருடைய பந்துவீச்சு பிரமிக்க வைத்தது’’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில், “நாங்கள் பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் பவர் பிளேவின் முடிவில் நல்ல நிலையில் இருந்தோம். நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றம் அளிக்கும் விதமாக சில விஷயங்களை செய்தோம். நான் ஒரு நல்ல கேட்ச் வாய்ப்பை தவறவிட்டேன். அதனால் சிவம் துபே ஒரு அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். பேட்டிங்கில் அற்புதமான நிலையில் இருந்த போது தேவையின்றி 2 முக்கிய விக்கெட் இழந்ததால் எதிர்பாராத தோல்வியை சந்தித்தோம்’’ என்றார். இந்த வெற்றி மூலம் 3-1 என இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

ஆல்ரவுண்டருக்கு மாற்று வேகப்பந்து வீச்சாளரா?-
இந்திய அணியின் பேட்டிங்கின் போது சிவம் துபேவின் ஹெல்மெட்டில் இங்கிலாந்தின் ஜேமி ஓவர்டன் வீசிய பவுன்சர் பலமாக தாக்கியது. இதனால் மூளையதிர்ச்சி காரணமாக இந்திய அணியின் பீல்டிங்கின் போது அவர் களம் இறங்கவில்லை. அவருக்கு பதில் ஹர்சித் ரானா களம் இறங்கி 4 ஓவரில் 33 ரன் கொடுத்து 3 விக்கெட் வீசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு இதுதான் முதல் சர்வதேச டி.20 போட்டியாகும். துபேவுக்கு பதிலாக ஐசிசியின் விதிப்படி ரானா களம் இறங்கியது இங்கிலாந்து வீரர்களை அதிருப்தியடைய வைத்தது. இதுபற்றி பட்லர் கூறுகையில், இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதுபற்றி என்னிடம் ஆலோசிக்கவில்லை. போட்டி நடுவர் நாத் தான் இந்த முடிவை எடுத்ததாக கள நடுவர்கள் கூறினர். எனவே நான் மறுப்பு சொல்ல முடியாமல் போய்விட்டது. இதுபற்றி நாத்திடம் சில கேள்விகளை கேட்டு தெளிவை பெற முயற்சிப்பேன், என்றார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், பீட்டர்சன் ஆகியோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன்; 3 விக்கெட் எடுத்த ஹர்ஷித் ரானா கூறியதாவது:
இது எனது கனவு அறிமுகமாகும். 2 ஓவர் முடிந்த பின்னர்தான் துபேவுக்கு மாற்றாக நான் ஆடப்போவதாக பயிற்சியாளர் கம்பீர் கூறினார். நான் இந்த தொடருக்கு மட்டுமில்ல, நீண்ட காலமாக ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் என்னை நிரூபிக்க விரும்பினேன். ஐபிஎல்லில் நான்றாக பந்துவீசினேன். அதையே இங்கும் செய்தேன், என்றார்.

The post 4வது டி.20 போட்டியில் வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்தியா; சிவம் துபே, ஹர்திக் அனுபவத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீட்டனர்: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : India ,4th T20I ,Shivam Dubey ,Hardik ,Suryakumar ,Pune ,T20I ,England ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்