×

ஆஷஸ் டெஸ்டில் மெக்ராத்தின் சாதனையை தகர்த்தார்; ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் புதிய சாதனை: ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் டக் அவுட்

 

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் மெக்ராத்தின் சாதனையை தகர்த்து நாதன் லயன் புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று துவங்கியது. இதில் வென்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும் என்ற சூழலில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கியது.

காயத்தில் இருந்து மீண்ட ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த போட்டியில் களம் கண்டார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில், துவக்க வீரர் ஹெட் 10 ரன்னிலும், வெதரால்ட் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷனே 19 ரன்னில் நடையை கட்டினார். இந்த சூழலில் ஐபிஎல்லில் அதிக தொகைக்கு விலை போன ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் களமிறங்கினார்.

ஆனால், ரூ.25.20 கோடிக்கு கேகேஆர் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட கிரீன் நேற்றைய போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை மீட்கும் பொறுப்பை கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி மேற்கொண்டனர். இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் குவித்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவாஜா 82 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் ஆடிய அலெக்ஸ் கேரி 143 ரன்களில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஸ்டார்க் 9 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விலாச ஆஸ்திரேலியா அணி 371 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் ஜேக் கிராலி 9 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். சற்று அதிரடி காட்டிய பென் டக்கட் 29 ரன்களில் நாதன் லயனிடம் சரணடைந்தார்.

இது லயனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 564வது விக்கெட்டாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தை(563) பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தார். ஷேன் வார்னுக்குப் பிறகு டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். தொடர்ந்து போப் விக்கெட்டையும் லயன் கைப்பற்ற, இங்கிலாந்தின் துருப்பு சீட்டான ஜோ ரூட்டை கம்மின்ஸ் அவுட்டாக்கினார். இந்திய நேரப்படி இன்று காலை 9 மணி வரை 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. கேரி புரூக் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் களத்தில் உள்ளனர்.

 

Tags : Australia ,Nathan Lyon ,McGrath ,Ashes Test ,Adelaide ,England ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்