×

த்ரில் இருக்கும், பாதுகாப்பு இல்லை இளைஞர்கள் வேகமாக வாகனத்தை இயக்காதீர்கள்

*முதல்வர் ரங்கசாமி அறிவுரை

புதுச்சேரி : மாணவர்கள், இளைஞர்கள் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம் என முதல்வர் ரங்கசாமி அறிவுரை வழங்கியுள்ளார். புதுவை அரசின் போக்குவரத்து துறை சார்பில் 36வது சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: சாலை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடவுள் கொடுத்த உயிர் முக்கியமானது. அதை நாமே மாய்த்துக்கொள்ளலாமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் விபத்துகளை தவிர்க்க ஒரு குழு அமைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த விழாவுக்கு அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.

இதிலிருந்தே விழாவின் முக்கியத்துவம் தெரியும். அனைத்து துறை அதிகாரிகளும் விபத்தில்லாத புதுவையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இருசக்கர வாகனங்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது. வாகனத்தில் வேகமாக சென்று பள்ளத்தில் விழும்போது ஏற்படும் விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே சாலைகளை சீரமைப்பது அவசியமான ஒன்று, வேகத்தை குறைப்பதற்காக வேகத்தடை அமைத்தோம்.

சில இடங்களில் வேகத்தடை இருப்பதே தெரிவதில்லை. இதனால் வேகமாக சென்று கீழே விழுந்து தலையில் காயமடைகின்றனர். இதனால் வேகத்தடை அமைக்கும்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி வெள்ளை நிற கோடு அமைக்க வேண்டும். சில இடங்களில் குறுகிய இடைப்பட்ட பகுதியில் அதிக வேகத்தடைகள் அமைக்கப்படுவதும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது.

அதே சமயத்தில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவோருக்கு மிக விரைவாக சிகிச்சையளிப்பது அவசியம். ஏனெனில் ரத்தம் உறைவதற்கு முன்னதாக சிச்சையளிக்கப்பட வேண்டும். எனவே உயிர்களை பாதுகாக்க என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதையெல்லாம் நாம் பார்க்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம். இளைஞர்களுக்கு வாகனத்தில் வேகமாக செல்வது திரில்லாக இருக்கும், ஆனால் அது பாதுகாப்பற்றது. புதுச்சேரி சின்னஞ்சிறிய மாநிலம், அனைத்து வசதிகளும் அருகருகே அமைந்திருக்கும் போது, வேகமாக போக வேண்டியதில்லை. 40 கி.மீ. வேகத்தில் சென்றாலே விபத்துகளை தவிர்க்க முடியும்.

வேகத்தை குறைப்பதால் செல்ல வேண்டிய இடத்துக்கு 5 நிமிடம் தாமதமாக செல்லலாம், ஆனால் பாதுகாப்பாக செல்ல முடியும். சாலை விதிகளை கடைபிடித்து கல்லூரி மாணவர்கள் வேகத்தை குறைத்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.

நம்மால் மற்றவர்களுக்கும் சிரமம் ஏற்படுவதை உணர்ந்து நடக்க வேண்டும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் 200 பேர் உயிரிழக்கிறார்கள் என்பது வேதனையானது. இதனை நாம் குறைத்தாக வேண்டும். காவல்துறையை சேர்ந்தவர்கள் போக்குவரத்து சரி செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு, சிறு மாற்றங்களை கொண்டு வந்து வாகன நெரிசலை குறைக்கும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post த்ரில் இருக்கும், பாதுகாப்பு இல்லை இளைஞர்கள் வேகமாக வாகனத்தை இயக்காதீர்கள் appeared first on Dinakaran.

Tags : Principal ,Rangasamy ,Puducherry ,36th Road Safety Month Closing Ceremony ,Kampan Art Gallery ,Transport Department of the State ,Puduwa ,Dinakaran ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு