கூடலூர் : நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து தெப்பக்காடு வரும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடி வழியாக கூடலூரில் இருந்து மசினகுடியில் வசிக்கும் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான வீடுகள் கட்டுமான பொருட்களை கொண்டு வருவதற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இந்த சோதனை சாவடியை கடந்து மசினகுடி பகுதிக்கும் மசினகுடி வழியாக ஊட்டிக்கும் செல்வது வழக்கம்.
ஆனால் இந்த வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்லவும் வனத்துறையினர் தடைவித்துள்ளதாக கூறப்படுகிறது. வனத்துறையின் இது போன்ற நடவடிக்கைகளால் மசினகுடி ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் வனத்துறை சோதனை சாவடி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுலா வருமானம் போன்றவற்றை முடக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபட்டு வருவதாகவும் இத்தகைய நடவடிக்கைகளை வனத்துறை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நேற்று மதியம் சுமார் ஒரு மணி முதல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடந்தது.
இளையதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த புலிகள் காப்பக உதவி கள உதவி இயக்குனர் அருண்குமார் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வனத்துறை மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
கால்நடை வளர்ப்பு விவசாயம் ஆகியவற்றை வாழ்வாதாரமாக கொண்டிருந்த இப்பகுதி மக்களை இந்தத் தொழில்களை பல்வேறு சட்டங்கள் மூலம் கைவிட வைத்தனர். மாடுகளின் மேய்ச்சல் நிலங்களை வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதில் மாடுகள் மேய தடை விதிக்கின்றனர். ஆற்றில் இருந்து விவசாயத்திற்கு நீர் எடுப்பதை தடை செய்கின்றனர். சுற்றுலா வருமானம் ஏற்படுத்தி தருவதாக கூறி சூழல் சுற்றுலாத் திட்டத்தை ஆரம்பித்தனர்.
தற்போது கடந்த நான்கரை வருட காலமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டு அதனை மீண்டும் துவக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதை கூட தடை செய்து வருகின்றனர்.
கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தடை விதிப்பதோடு, சுற்றுலா வாகனங்களையும் இந்த வழியாக செல்ல தடை விதித்து வருகின்றனர். தொடர்ச்சியாக இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறையின் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக தளர்த்தப்படுவதாகவும், வரும் 5ம் தேதி எம்எல்ஏ, காவல் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணவும் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
The post மசினகுடி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வனத்துறையினரை கண்டித்து மறியல் போராட்டம் appeared first on Dinakaran.
