×

ஜம்போரி முகாமில் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஆய்வு

திருச்சி, ஜன.30:திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெறும் சாரண – சாரணியருக்கான ஜம்போரி முகாமில் அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு மாநில உணவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாப்பிட்டு பார்த்து குறைகளை கேட்டறிந்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சாரண – சாரணியர் இயக்க மாணவ- மாணவிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 7 நாட்கள் அதே பகுதியில் தங்குகின்றனர்.  இதில் சாரண- சாரணிய இயக்கத்தை சேர்ந்தவர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியா, இலங்கை, சவுதி அரேபியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் மாணவ- மாணவிகள் வந்துள்ளனர். அவர்களுக்காக அந்த மாநிலத்திற்கு தகுந்த உணவுகள், அவரவர் விருப்பம் போல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு பாரத சாரண – சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யமொழி நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது ஒவ்வொரு மாநில உணவு தயாரிக்கும் பகுதிக்கு சென்று உணவு சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்தார். உணவில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தையும் பார்வையிட்டார். அதன் பின்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிடும் இடத்திற்கு சென்று அங்கு முதலில் மாணவ- மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் சாப்பிட்டார். தொடர்ந்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சாரண – சாரணியர் உள்ள பகுதிக்கு சென்று அங்கு உள்ள உணவையும் சாப்பிட்டு பார்த்த பின் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து அந்த மாணவ – மாணவிகள் மற்றும் பொறுப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் குறை ஏதேனும் இருந்தாலோ என்ன தேவை என்றாலோ 24 மணி நேரமும் அதற்கான பொறுப்பாளர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சொன்னால் உடனே நிவர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார். இதுமட்டுமின்றி தமிழக முதல்வர் இந்த நிகழ்வினை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.

The post ஜம்போரி முகாமில் உணவின் தரம் குறித்து அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Jamboree ,Trichy ,School Education Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Manapparai ,Trichy district ,Manapparai Chipkot ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது