வேலூர், ஜன.26: வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் திருவிழா பொங்கல் பண்டிகை நாள் முதல் நடந்து வருகிறது. மாடு விடும் விழாவுக்கு சாலையின் இருபுறமும் தடுப்புகள் கட்டி கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது. திருவிழாவில் சில இடங்களில் விதிமீறல்களில் சிலர் ஈடுபடுவதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடிக்கின்றனர்.இந்நிலையில் மாடு விடும் விழாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி வேலூர் மாவட்ட எருதுவிடும் சங்கத்தினர் காட்பாடியில் நேற்று அமைச்சர் துரைமுருகனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாவில் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி, கடந்த ஆண்டு எப்படி நடந்ததோ அப்படியே இந்த ஆண்டும் மாடு விழாவை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மதிவாணன் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தி, மாடு விடும் விழாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி கடந்த ஆண்டைப்போலவே அனுமதி வழங்கும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது. பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், பெரியார் பற்றி தொடர்ந்து அவதூறாக சீமான் கூறி வருகிறார். இத்தனை ஆண்டு காலம் ஆகி கூட இவ்வளவு பெரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்து கூட சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்திற்கு என்ன நிலைமை ஏற்பட்டது. விவரம் தெரியாம பேசுபவர்களை என்ன செய்வது. எல்லா காலங்களிலும் இது போன்ற அதிமேதாவிகள், அறிவு ஜீவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இரும்பு தொன்மையானது தமிழகத்தில் தோன்றியது என தமிழக முதல்வர் கூறியது உண்மை. அதனால் தான் பதில் ஏதும் பிரதமர் மோடி கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய போட்டிகளான ஜல்லிக்கட்டு போட்டி, எருது விடும் விழாக்களை நடத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். எருது விடும் நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கண்காணித்து செய்ய வேண்டும். ஆகவே காலங்காலமாக நடந்து வரும் தமிழரின் பாரம்பரிய போட்டியான எருது விடும் நிகழ்ச்சிக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது நல்லது அல்ல. இதுகுறித்து கலெக்டர், எஸ்.பி.யிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பெரியார் குறித்த விவரம் தெரியாமல் எல்லா காலங்களிலும் அதிமேதாவிகள் இருக்கத்தான் செய்கிறார்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.
