×

ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சம் இழந்ததால் ரயில் முன்பு பாய்ந்து தீயணைப்பு வீரர் தற்கொலை

நாகர்கோவில்: திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கருப்பசாமி(29). தீயணைப்பு துறை வீரர். கடந்த 2018ல் சென்னையில் பணியில் சேர்ந்த கருப்பசாமி, கடந்த 2022ல் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார். இவர் ஆரல்வாய்மொழி அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதல் தீயணைப்பு வீரர் கருப்பசாமி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி ரூ.17 லட்சம் வரை இழந்துள்ளதும், இதற்காக வாங்கிய கடனை பல்வேறு வழிகளில் அடைக்க முயற்சி செய்ததும், மனநெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து இருக்கிறார். என்ன என்று பார்த்தால், ரம்மி விளையாடி ரூ.17 லட்சம் இழந்துள்ளார். தங்களது பிள்ளைகள் கல்லூரியில் படிக்கலாம், வேலையில் இருக்கலாம் ரம்மி விளையாடும்போதே கண்டுபிடித்து, விளையாடாதே என கவுன்சலிங் கொடுத்து, மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை வழங்கி சரிசெய்துகொள்ள வேண்டும். ரம்மி விளையாட்டில் மொத்தபணத்தையும் தொலைத்துவிட்டு, உயிரையே மாய்க்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். அதனால் ரம்மி விளையாட்டை விளையாடாதீர்கள்’ என கூறியுள்ளார். அவரது விழிப்புணர்வு வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

The post ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சம் இழந்ததால் ரயில் முன்பு பாய்ந்து தீயணைப்பு வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Chandran ,Rediyarpatti, Tirunelveli district ,Karuppasamy ,Chennai ,Nagercoil fire station ,Maheshwari… ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...