- ஆர்.என்.ரவி
- Appavu
- சாடல்
- பாட்னா
- சென்னை
- மாநாட்டில்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- ஜனாதிபதி
- எம். அப்பாவு
- பாராளுமன்ற
- இந்தியா...
- பாட்னாவில் அப்பாவு சாடல்

சென்னை: அரசமைப்பின் 75வது ஆண்டு விழா மாநாடு பாட்னாவில் நேற்று நடந்தது. இதில், அரசமைப்பு மதிப்புகளை வலுப்படுத்துவதில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற அமைப்புகளின் பங்களிப்பு குறித்து தமிழ்நாடு பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் அரசமைப்புச் சட்டம் சமமான வாய்ப்பை வழங்கியிருந்தாலும், சமீபத்தில், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் இந்தியில் தலைப்புகளை கொண்டுள்ளன. இச்செயலானது அனைத்து மசோதாக்கள், சட்டங்களிலும் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசமைப்பின் பிரிவு 348ஐ மீறுவதாகும்.
மாநில சுயாட்சி கேள்விக்குறியாகிவிட்டது. கூட்டாட்சி தத்துவமும் நீர்த்துப் போய்விட்டது. ஒன்றிய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசு அதிகாரம் மற்றும் நிதிப்பங்கீட்டில் பாகுபாடு காட்டுவது மாநில அரசுகளுக்கு பெரும் தடையாக உள்ளது. சமீபகாலமாக, அரசமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விஷயங்களில் ஆளுநர்கள் தேவையில்லாமல் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 176(1) பிரிவின்படி, ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில், ஆளுநர் சட்டமன்ற பேரவையில் உரையாற்றுவார்.
ஆனால், பதவியேற்றதில் இருந்து, தற்போதைய தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்து ஆக்கி வருகிறார். தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு பழமையான தமிழக சட்டமன்றத்தையும் ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் இருந்து வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆளுநர் குறித்து பேசியபோது இடையிடையே குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஆளுநர் குறித்து பேசக்கூடாது எனவும், ஆளுநர் குறித்து சட்டப்பேரவை தலைவர் பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது எனவும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு செய்தார்.
The post ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்: பாட்னா மாநாட்டில் அப்பாவு சாடல் appeared first on Dinakaran.
