18.1.2025 சனி திருவையாறு தியாகராஜ ஆராதனை
திருவாரூரில் 1767ஆம் ஆண்டு ராம பிரம்மம் சீதம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர். தஞ்சைக்கு அருகிலுள்ள திருவையாறில் இந்த குடும்பம் குடியேறியது. அங்கே எளிய வாழ்க்கை வாழ்ந்தார். சமஸ்கிருத மொழியிலும், தாய் மொழியிலும் சிறந்து தேர்ச்சி பெற்றார். அதோடு, ராம பக்தியும் இளமையிலேயே இவருக்குச் சேர்ந்து கொண்டது. சோந்தி வெங்கடராமையரிடம் முறையாகச் சங்கீதம் பயின்றவர். குருவருளும் திருவருளும் பெற்று சிறந்த சங்கீதச் சக்கரவர்த்தியாக விளங்கினார். ஒரு முறை, காஞ்சீபுரத்தில் இருந்து ராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து ராம நாமத்தை 96 கோடி முறை ஜபிக்கும்படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அப்புனிதச் செயலை 21 ஆண்டுகளில் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 1,25,000 முறை ராமநாமத்தைச் ஜபித்து வந்தார். இதனால் பல தடவைகள் ராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. தியாகராஜர், சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார். அபூர்வராகங்களில் பாடியவர். இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி, இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர், அரசவைக்கு செல்ல மறுத்தார். ராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப் படவில்லை. இவர் இளமையிலேயே ராம, சீதா, லட்சுமண விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்வதும், ராம நாமத்தை செபிப்பதும் வழக்கமாக இருந்தது. இவரது குணங்களை வெறுத்த இவரது தமையனார் ஜபேசன், ஒருநாள் இரவு இவர் பூஜித்து வந்த சீதா, ராம, லட்சுமண விக்கிரகங்களைத் தூக்கி காவேரி நதியில் எறிந்துவிட்டார். தமது வழிபாட்டு விக்கிரகங்களைக் காணாமல் வேதனையுற்ற தியாகராஜர், அவற்றைத் தேடி அலைந்து ராமபிரான் அருளால் விக்கிரகங்கள் கிடக்குமிடத்தை அறிந்து, மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.இவர் பல திருத்தலங்களுக்குச் சென்று பாடி இருக்கின்றார். இவர் பாடிய “பஞ்சரத்ன கீர்த்தனைகளை’’ ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் பஞ்சமி திதியில் திருவையாறில் உள்ள அவருடைய பிருந்தாவனத்தில் சங்கீத விற்பன்னர்கள் அனைவரும்கூடி இசைத்து ஆராதனை நடத்துகின்றனர். அந்த ஆராதனை நடக்கக்கூடிய பஞ்சமி நாள் இன்று.
19.1.2025 ஞாயிறு சண்டேசர் குரு பூஜை
இன்று சண்டேஸ்வரர் குருபூஜை. சகல சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வரும் வழியில், திருப்பனந்தாள் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது சேங்கனூர் என்று அழைக்கப் படும் சேஞ்ஞலூர் கிராமம். இங்கு அவதரித்தவர் சண்டேசர். சோழ மன்னர்கள் முடிசூடிக்கொள்ளும் பழமை வாய்ந்த ஐந்து நகரங்களில் இந்த சிவஸ்தலமும் ஒன்று. இத்தலத்திற்கு சத்தியபுரி, சண்டேசஸ்வரபுரம், குமாரபுரி என்ற பெயர்களும் உண்டு. கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சம்பந்தர், அப்பர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிபி, அரிச்சந்திரன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 41வது தேவாரத்தலம். சண்டேச நாயனாரின் இயற்பெயர் விசாரசருமர்.விசாரசருமர் என்பவர் மாடுகளை மேய்த்து, அவற்றுடன் பேசி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர். கூடவே சிவபக்தரும்கூட. மாடுகளை மேய்க்கவிட்டு, ஆற்றில் நீராடி, மலர்கள் பறித்து வந்து, மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்வார். அங்கு மேயும் மாடுகளின் பாலையும் அபிஷேகம் செய்வார். உங்கள் மகன் பாலையெல்லாம் மண்ணில் ஊற்றி வீணாக்குகிறான் என்று சிலர், விசாரசருமரின் தந்தையிடம் போய் சொன்னார்கள். கோபமுற்ற தந்தை, அந்த பால்குடங்களை எட்டி உதைத்தார். வெகுண்டெழுந்த விசாரசருமர், அருகிலிருந்த கோடாரியால் தன் தந்தையின் காலை வெட்டினார்.
தந்தை எச்சதத்தன் உயிர் போனது. மீண்டும் முன்பு போல சிவபூஜை செய்ய ஆரம்பித்தார் விசாரசருமர். விசாரசருமரின் பக்தியையும் பூஜையையும் கண்டு மகிழ்ந்த ஈசன், உமையம்மையோடு காட்சியளித்தார். பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என்று கூறி, அவரை மார்போடு அணைத்து உச்சிமுகர்ந்தார் சிவபெருமான். சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். “தாம் உண்ட அமுது, பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்று உரிமையாக்கினார். விசாரசருமருக்கு “சண்டீசன்” என்ற பதவியையும் தந்து அருள்பாலித்தார் சிவபெருமான். தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் “சண்டேஸ்வர நாயனார்” ஆனார். இன்று அனைவரும் அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று சண்டேச பெருமானின் அருளைப் பெறுவோம்.
20.1.2025 திங்கள்நம்மாழ்வார் மோட்சம்
வைணவத்தில் ஆழ்வார் என்றாலே நம்மாழ்வாரைக் குறிக்கும். வைகுண்ட ஏகாதசி தொடங்கும் ராப்பத்து உற்சவங்களில், திருவாய்மொழி சாற்று நாளான (நிறைவு) இன்று நம்மாழ்வார் மோட்சம் நடத்திக் காட்டப்படுகிறது. நம்மாழ்வார் திருவுருவத்தை தாங்கிச் சென்று இறைவனுடைய திருவடியில் வைத்து துளசி தளங்களால் மூடுவார்கள். அதற்குப் பிறகு எங்களுக்கு ஆழ்வாரைத் தந்தருள வேண்டும் என்று அடியார்கள் பிரார்த்தனை செய்ய, அந்தத் துளசி தளங்களை எல்லாம் விலக்கி ஆழ்வாரை திரும்பவும் அழைத்து வருவார்கள். இது உற்சவமாக ஒவ்வொரு திருத்தலத்திலும் நடத்தி காட்டப்படுகின்றது. நம்மாழ்வார் மோட்சம் பெற்ற நாளில் வைணவ ஆலயங்களுக்கு சென்று உற்சவத்தை கண்ணால் காண்பதன் மூலமாக நமக்கு பிறவித்தளை நீங்கும்.
20.1.2025 திங்கள் கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்
ராமானுஜருடைய மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் கூரத்தாழ்வான். கூரத்தாழ்வான் அவதார நட்சத்திரம் தை மாதம் அஸ்தம். கூரத்தாழ்வானின் திருநட்சத்திர வைபவம் எல்லா ஆலயங்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அவர் ராமானுஜரின் ஐந்து சீடர்களில் ஒருவர். ராமானுஜருக்கு ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு வலதுகரமாகத் திகழ்ந்தவர். வைராக்கிய சீலர். எந்தக் குற்றங்களும் இல்லாதவர். தன்னுடைய மிகப் பெரிய செல்வத்தை அப்படியே கூரத்தில் (காஞ்சீபுரம் அருகில் உள்ள ஊர்) ஏழை எளியவர்களுக்குத் தந்துவிட்டு, ராமானுஜருக்கு அடியவராக உஞ்ச விருத்தி செய்து வாழ்க்கையைக் கழித்தவர். எம்பெருமான் என்கிற செல்வத்தைத் தவிர பிற செல்வங்களை விரும்ப மாட்டேன் என்கிற வைராக்கியம் அவருடைய வாழ்நாள் முழுவதும் இருந்தது. அவர் எழுதிய துதி நூல்கள் அநேகம். அவளுடைய திருநட்சத்திர வைபவம் இன்று.
20.1.2025 திங்கள் மதுரை செல்லத்தம்மன் தை பெருநாள் உற்சவம் ஆரம்பம்
கண்ணகி, மதுரைக்கு விஜயம் செய்த போது தங்கியிருந்த இடத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பார்வதி சந்நதியும் உள்ளது. அம்மன் ஒரு கையில் சூலம் மற்றொரு கையில் கொண்டை பூவுடன் அமர்ந்த நிலையில் பீடத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். வெளிப் பந்தலில் கண்ணகி சந்நதி காணப்படுவதோடு, ஒரு கையில் கொலுசு ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குடும்ப நல்லிணக்கத்திற்காக பக்தர்கள் கண்ணகிக்கு மாலைகள் மற்றும் சுண்ணாம்பு பழங்களால் பிரார்த்தனை செய்கின்றனர். செல்லத்தம்மனுக்கு எதிரே பேச்சியம்மன் சந்நதி உள்ளது. நாகராஜாவின் சிலைகளும் உள்ளன, சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நாகதேவிக்கு மஞ்சள் அபிஷேகம் மற்றும் மலர்களை சமர்பிப்பார்கள். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமஞ்சனத்தின் போது, ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பிதழாக செல்லத்தா அம்மனுக்கு முதல் பட்டுப் புடவை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் செல்லத்தா அம்மன் தனக்குப் பரிசாகப் பெற்ற பட்டுப் புடவை அணிந்து ஊர்வலத்தில் காட்சியளிக்கிறார். அனைத்து பூஜைகளும் அம்மனுக்கு செய்யப்பட்டு, பின்னர் கண்ணகிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தோல் மற்றும் கண் நோய் உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறையாவது சென்று வருவது நல்லது.கண்ணகி, செல்லத்தா அம்மன் சந்நதிகள் தவிர, வெளி பிராகாரத்தில் துர்க்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், அய்யனார், காலபைரவர் சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
21.1.2025 செவ்வாய்தேவ தேவாஷ்டமி
தை மாத தேய்பிறை அஷ்டமி, தேவ தேவாஷ்டமி தினமாக கடைப் பிடிக்கப் படுகிறது. மனபயம் விலகவும், உயர்பதவி கிடைக்கவும் இன்று விரதமிருந்து பைரவரை வணங்க வேண்டும். செவ்வாய் பகல் முதல் புதன் மாலை வரை அஷ்டமி உள்ளது. இன்று மாலை பைரவரை தீபம் ஏற்றி வழிபடுங்கள். கொடிய தோஷங்கள் நீங்கும், கொடுத்த கடன் வசூல் ஆக, பைரவர் சந்நதியில் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
21.1.2025 செவ்வாய் காஞ்சி வரதருக்கு அனுஷ்டானகுள உற்சவம்
இன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் பெருமாள் ஸ்ரீ ராமானுஜருடன் செவிலிமேட்டுக்கு அருகிலுள்ள சாலைக்கிணற்றிற்கு (அனுஷ்டான குளத்திற்கு) எழுந்தருளுகிறான். வேதபாராயணம் ஆரம்பிக்கப் பட்டவாறே, அத்யயனம் முடிந்து திருப்பல்லாண்டு அனுஸந்தானம் ஆரம்பிக்கப்படுகின்றது. தேசிகன், எதிரிகளின் சூழ்ச்சியில் அகப்பட்டிருந்த ராமானுஜரை வேடுவன் வேடுவப் பெண்மணி திருவுருவங்களில் காப்பாற்றினார் காஞ்சி வரதராஜன். பிறகு இக்கிணற்றிலிருந்து அவர் தீர்த்தம் கொண்டுவந்து காஞ்சி வரதராஜருக்கு சமர்ப்பித்தார். அதை நினைவு கூறும் உற்சவம் இது. இக்கிணற்றருகில் எழுந்தருளியவுடன் பெருமாளுக்கு தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. ராமானுஜர் சாலைக் கிணற்றருகில் எழுந்தருள, தாததேசிக திருவம்சத்தினர் ஒருவர் (கடந்த கார்த்திகையில் கைசிகபுராணம் வாசித்தவர்) ராமானு ஜரின் பிரதிநிதியாக, சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தத்துடன் கூடிய திருமஞ்சனக் குடத்தை வாத்ய வேத கோஷத்துடன் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வர, பேரருளாளனுக்கு சிறப்பு திருமஞ்ஜனம், திருவாராதனம், தளிகை நடைபெறுகிறது. சார்ங்கம், தலைப்பாகை ஆகிய வேடன் அலங்காரத்தோடு பெருமாள், ராமானுஜர், தூப்புல் தேசிகன் சந்நதிக்கு எழுந்தருளுகிறார். ஸ்ரீ பாஷ்யகாரருக்கும் (ராமானுஜர்) ஸ்ரீ தேசிகனுக்கும் மரியாதைகள் ஆகின்றன. பின், சந்நதிக்குத் திரும்பும் திருக்கோயில் மாடவீதிகளில் புறப்பாடு நடைபெறுகிறது. கீழ மாடவீதி கீழைக் கோபுரத்திற்கு எதிரில் உள்ள வீதியில் உடையவர் திருமாளிகை அமையப் பெற்றுள்ளது. அங்கே எழுந்தருளி மண்டபப்படி கண்டருளுகிறார்கள். பின் ஆஸ்தானம் சேருகிறார்கள்.
23.1.2025 வியாழன் தாயுமானவ சுவாமிகள் குருபூஜை
“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடியவர் தாயுமானவ சுவாமிகள். தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார், கேடிலியப்பர் மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவார்கள். திருச்சி தாயுமானேஸ்வரரின் அருளால் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளியை ஆண்டுகொண்டிருந்த விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம், கணக்கராகப் பணிபுரிந்தவர். மிக எளிமையான, வாழ்க்கை வாழத் தேவையான பல பாடல்களை எழுதியவர். தவநெறியில் சிறந்து விளங்கியவர். பல திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டவர்.தாயுமான சுவாமிகள், திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 56 தலைப் புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய ‘பராபரக்கண்ணி’ மிகவும் புகழுடையது. இதில், 389 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன. பராபரக்கண்ணியில், “அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே!” என்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை, ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார்.
விஷ்ணுபிரியா
22.1.2025 புதன் நரசிம்மருக்கு பூஜை செய்ய ஏற்ற ஸ்வாதி நாள்.
23.1.2025 வியாழன் திருநீலகண்டர் குருபூஜை.
23.1.2025 வியாழன் ஆழ்வார்
திருநகரியில் நம்மாழ்வார் புறப்பாடு.
24.1.2025 வெள்ளி திருத்தணி
முருகன் கிளி வாகனச் சேவை.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.
