×

இந்தியா ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்: வாகை சூடிய சிந்து

புதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அற்புதமாக ஆடி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் 15ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகின்றன. ஆண்கள் பிரிவில் நடந்த போட்டிகளில் இந்திய முன்னணி வீரர்கள் தோல்வியை தழுவி ஏமாற்றம் தந்தனர். நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரர் லின் சுன் யி மோதினர். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய லின் சுன், 21-15, 21-10 என்ற நேர் செட்களில் வென்றார். இந்த போட்டி 37 நிமிடங்களில் முடிந்தது.

மற்றொரு போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக தரவரிசையில் 26ம் இடத்தில் உள்ள எச்.எஸ்.பிரணாய், சீன தைபே வீரர் சூ லி யாங் உடன் மோதினார். ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பிரணாய் கடுமையாக போராடியபோதும், 21-18, 18-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். சூ லி யாங்குடன் இரண்டாவது முறையாக பிரணாய் தற்போது தோல்வியை தழுவியுள்ளார். இன்னொரு போட்டியில் இந்திய வீரர் ரஜாவத், ஜப்பான் வீரர் நரோகா மோதினர். முதல் செட்டை இழந்த ரஜாவத் 2வது செட்டை போராடி கைப்பற்றினார். இருப்பினும் 3வது செட்டை அவர் எளிதில் இழந்தார். இதனால், 16-21, 22-20, 13-21 என்ற செட் கணக்கில் ரஜாவத் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் பிரிவில் நேற்று இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரான்ஸ் வீரர் லேனியருடன் மோதிய அவர், 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர், சீன வீரர் ஹாங் யாங் வெங் உடன் மோதுவார். பெண்கள் பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை சுய்சுவுடன் போட்டியிட்டார். இந்த போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய சிந்து, 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். அவர், இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவை சேர்ந்த, உலகின் 4ம் நிலை வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா டுங்ஜங் உடன் மோதவுள்ளார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, ஜப்பானின் மியாஸாகி மோதினர். இந்த போட்டியில் ஆரம்பம் முதல் மியாஸாகியின் ஆதிக்கமே இருந்தது. இதனால், 21-6, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்றார்.

The post இந்தியா ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்: வாகை சூடிய சிந்து appeared first on Dinakaran.

Tags : India Open badminton quarterfinals ,Sindhu ,New Delhi ,P.V. Sindhu ,India Open badminton women's ,India ,Kiran George ,India… ,India Open badminton ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...