×

சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவொற்றியூர்: சென்னை – நெல்லை (எண் 20665) மற்றும் நெல்லை – சென்னை (எண் 20666) இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. டிக்கெட் முன்பதிவிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2023 செப்டம்பர் 25ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 15 மாதங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சராசரியாக மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

வாரத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகின்றன. காலை 6 மணிக்கு நெல்லை சந்திப்பில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 11ம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 சேர் கார் பெட்டிகள், 2 எக்ஸிக்யூடிவ் கார் பெட்டிகள் என்ற வகையில் இனிமேல் இயக்கப்பட உள்ளது. அதேபோல் திருவனந்தபுரம் – காசர்கோடு – திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் சேர்க்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bharat ,Chennai ,Nella ,Southern ,Railway ,Thiruvotiyur ,Bharat Express ,Southern Railway ,
× RELATED சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி