×

மணலி புதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் படுகொலை: போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

திருவொற்றியூர், ஜன.9: மணலி புதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அடுத்த மணலி புதுநகர் அருகேயுள்ள வெள்ளிவாயல் கிராம ஊராட்சி முன்னாள் தலைவர் சதா. இவரது மகன் விக்கி என்ற ராயப்பன் (29). இவர் வெள்ளிவாயல் அருகே வெள்ளாங்குளம் பகுதியில் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் (3), ஜாஸ்மின் என்ற ஒன்பது மாத குழந்தையுடன் வசித்து வந்தார். உணவு டெலிவரி தனியார் கான்டிராக்ட் எடுத்து நடத்தி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களை பார்த்து விட்டு வருகிறேன் என மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால், மாலை வரை வீடு திரும்பவில்லை. அடிக்கடி இதுபோல் இரவு வெளியில் தங்கி விடுவார் என்பதால் அவரது மனைவியும், பெற்றோர்களும் தேடவில்லை. இந்நிலையில் நேற்று காலை மணலி புதுநகர், நாப்பாளையம் அருகில் உள்ள முட்புதரில் தலையில் பலத்த காயங்களுடன் விக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்கியின் நண்பர்கள் ஆகாஷ் (25), பிரசாந்த் (26) ஆகிய இருவருடன் நேற்று முன்தினம் இரவு மது அருந்த சென்றதும், போதையில் ஏற்பட்ட தகராறில் விக்கியை நண்பர்களான ஆகாஷ், பிரசாந்த் மற்றும் ரவீந்தர் குமார் (46), அகிலன் ஆகியோர் கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து அதே பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கொலையாளிகள் பிரசாந்த், ரவீந்தர்குமார், அகிலன் ஆகிய 3பேரை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆகாஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணலி புதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் படுகொலை: போதையில் நண்பர்கள் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Former ,Panchayat ,President ,Manali Pudunagar ,Thiruvottriyur ,Former President ,Vellivayal ,Gram Panchayat ,Chennai, Sadha.… ,
× RELATED துவர்க்குளத்தில் பனை விதை விதைப்பு