×

புதன் கெட்டுவிட்டால் இப்படித்தான் சமாளிக்க வேண்டும்

புத்திக்குரிய கிரகம் புதன். புதன் சரியாக இருந்தால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளலாம். புதனின் அத்தனைக் காரகத்துவமும் ஒரு ஜாதகத்தில் வேலை செய்யுமா என்றால் நிச்சயமாக வேலை செய்யும். உதாரண ஜாதகம், கும்ப லக்கனம். லக்கினத்தில் சூரியன் புதன் இணைவு. சூரியன் ஏழுக்குரியவர். புதன், 5க்குரியவர் பஞ்சமாதிபதியும், கேந்திர அதிபதியும் இணைந்து லக்ன கேந்திரத்தில் நிற்கும் பொழுது, புதனுக்கு பத்திரயோகம் கிடைக்கிறது. பத்ர யோகம் ஒன்றே ஒரு மனிதனின் அறிவு நுட்பத்தைக் காட்டும்.

நவகிரகங்களில் புதன் மதிநுட்பத்துக்குக் காரகத்துவம் பெற்ற கிரகம் அல்லவா. அறிவுக்கு அரசன், வித்தைகளின் தலைவன், எழுத்தை ஆளுபவன் என பல அடையாளங்கள் உண்டு. ஜோதிடர்கள் அனைவரும் புதனின் அருளைப் பெற்றவர்களாகவே இருப்பார்கள். இந்த ஜாதகத்தில் (கும்ப லக்கனம்) சூரியனும் புதனும் இணைந்து இருப்பதால், புத ஆதித்ய யோகம் கிடைக்கின்றது.

இவை இரண்டும் இணைந்து வேலை செய்ததா என்றால், நன்கு வேலை செய்தது. இப்பொழுது அந்த ஜாதகருக்கு 65 வருடங்கள் ஆகிறது. புதன் எழுத்துத் துறையில் முன்னேற வைக்கும் அல்லவா. பல புத்தகங்களை இந்த ஜாதகர் எழுதியிருக்கின்றார். ஜோதிட துறையில் முன்னேற வைக்கும் அல்லவா. பல நண்பர்களுக்கு ஜோதிடம்கூறி வருகின்றார்.

ஜோதிட புத்தகங்களும் எழுதி இருக்கின்றார். புதன் வலுவாக இருந்தால், ஒரு ஆசிரியராகவோ அதாவது கற்பிப்பவராகவோ இருக்க வாய்ப்பு அதிகம். அதுவும், சூரியன் இணைந்ததால் அந்த வாய்ப்பு உண்டு. இது இந்த ஜாதகருக்கு நிஜமாகவுமே நடந்திருக்கிறது. 36 ஆண்டுகாலம் கல்லூரியில் மிகச்சிறந்த பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

புதன் வாக்குக்காரகன் என்பதால், பேச்சுத் துறையில் நல்ல வாய்ப்பினையும், அனுபவத்தையும் தருவான். அந்தக் காரகமும் வேலை செய்தது. ஜாதகர், கடந்த 40 வருடங்களாக பல்வேறு மேடைகளில் பேசி வருகின்றார். அப்படியானால், புதனுடைய காரகங்கள் அனைத்தும் ஒரு ஜாதகத்தில் புதன் வலிமையாக இருந்தால் நிச்சயமாக வேலை செய்யும்.

ஆனால், அது சில நேரங்களில் நேரடியாக கல்லூரியில் படித்து பட்டங்களைப் பெறும் அமைப்பைத் தராது. ஆனால், கட்டாயமாக பட்டறிவைத் தரும். மற்ற கிரகங்களால் வருகின்ற பிரச்னைகள் புதனால் தீரும். ஆனால், புதனே பிரச்னையாகி விட்டால், அதற்கான தீர்வுகள் கொஞ்சம் கடுமையாகவே இருக்கும். படிப்பு அறிவு மட்டும் புதன் அல்ல. அனுபவ அறிவும் புதன்தான். சில நேரங்களில், அது நேர் பலனைத் தராது. மறைமுக பலனைத் தரும். அதைவிட, இன்னும் சில ஜாதகங்களில் புதனால் கிடைக்கக்கூடிய அறிவை விபரீதமாக பயன்படுத்தி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கின்ற ஜாதகங்களும் உண்டு. ஒரு ஜாதகம். கும்பலக்னம். லக்னாதிபதி சனி எட்டில் மறைந்தார். அதே எட்டில் புதன் ஆட்சி பெற்றார்.

அவரோடு சந்திரனும் இணைந்து இருக்கின்றார். அஷ்டமாதிபதி வலுப்பெறுவதாலும், அவர் ஆறாமாதி சந்திரனோடு இணைந்ததாலும், நல்ல கூர்மையான அறிவு இருந்தாலும்கூட, பல நேரங்களில் இந்த ஜாதகருக்கு அது விபரீதமாகவே செயல்பட்டது. அறிவோடு வேலை செய்து, பத்து ரூபாய் சம்பாதித்தால் சில நேரங்களில் அது அதீதமான சில முந்திரிக்கொட்டை தனங்களைச் செய்ய வைத்து, 15 ரூபாய் செலவு செய்து வைத்துவிடும். அதற்கு காரணம், ஆறுக்குடைய சந்திரன். அதனால், புத்தி சில நேரத்தில் எதிர்மறையாகச் செயல்படும்.

அதேபோலவே இன்னொரு ஜாதகம்

மிதுன லக்னம், நாலு ஏழுக்குரிய புதன் மீனத்தில் நீச்சம். இப்பொழுது, புதனின் கேந்திர ஆதிபத்திய தோஷம் அடிபட்டுவிடுகின்றது. அதே நேரத்தில், மீனத்துக்குரிய குரு தனது இன்னொரு ராசியான தனுசு ராசியில் ஆட்சி பெற்று இருக்கின்றார். இதனால், புதனுக்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு, மறைமுகமான பலம் கிடைத்து விடுகின்றது. இதனுடைய விளைவு இவர் நன்றாகப் படித்து ஆசிரியர் தொழிலில் இருக்கின்றார். காரணம், குரு புதன் கூட்டு சிறந்த ஆசிரியராக மாற்றும். அதுவும், பத்தாமிட குரு (மிதுனத்துக்கு பத்து) என்பதால், ஆசிரியர் தொழில் ஏதாவது ஒரு விதத்தில் அமைந்துவிடும். அப்படியே அமைந்துவிட்டது.

இன்னொரு ஜாதகம்

மகர லக்கனம். எட்டாம் இடத்தில் சூரியன் புதன். இப்பொழுது சூரியன் ஆட்சி. புதன் இணைவு. புத ஆதித்ய யோகம் வேலை செய்ய வேண்டும். ஆனால், ஸ்தான பலன் கெட்டுவிட்டது. இதனால், இவர் ஏதோ ஒன்றைப் படித்து கையிலே பட்டம் வைத்திருக்கின்றாரே தவிர, எந்த வேலையும் செய்யவில்லை. இவர் படித்த படிப்புக்கான புத்திக் கூர்மையும் இல்லை. இன்றைய தேதி வரை பெரிய அளவில் ஜாதகருக்கு முன்னேற்றம் இல்லை. புதன் படிப்பு, கல்வி, புத்திக் கூர்மை என இதற்கு மட்டும் காரகத்துவம் வகிக்கவில்லை. அவர் நரம்புக்கும் அதிபதியாக இருக்கின்றார். புதன் கெட்ட பல ஜாதகர்கள் நரம்பு கோளாறினால் அவஸ்தைப் பட்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப் போலவே, புதன் தாய் வழி உறவுகளைச் சொல்லுகின்ற கிரகம்.

புதன், ஏதாவது ஒரு விதத்தில் ஸ்தான பலத்தில் கெட்டாலோ, பார்வை சேர்க்கையால் கெட்டாலோ அல்லது சார பலத்தில் கெட்டாலோ, தாய்வழி உறவுகள் சிக்கலாக இருக்கும். ஒன்று தாய் வழி உறவுகள் உதவுவதில்லை அல்லது சில நேரங்களில் எதிரியாக மாறி விடுவதும் உண்டு.

இன்னொரு ஜாதகம்

மீன லக்னம். பொதுவாகவே மீன லக்னத்திற்கு புதன் வலிமை பெறக்கூடாது. அதைப் போலவே, தனுசு லக்னத்திற்கும் வலிமை பெறக்கூடாது. காரணம், தனுசு லக்னத்திற்கு அவர் சப்தமாதிபதியாகவும், தசம கேந்திரத்திற்கு அதிபதியாகவும் வருகின்றார். இதனால், கேந்திர ஆதிபத்திய தோஷம் வந்துவிடுகிறது. இவர்கள் ஜாதகத்தில் புதன் நன்மை செய்வது போலவே ஆபத்தையும் தரும். அறிவைக் கொடுப்பார். ஆனால், அந்த அறிவைப் பயன்படுத்த முடியாத அத்தனை சூழ்நிலைகளையும் கொடுப்பார். இதற்கு என்ன மாற்று வழி என்று சொன்னால், இப்படிப்பட்ட அமைப்பில் புதன் கெட்டவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக சூழ்நிலைகளைக் கையாளத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அவர்கள் மற்ற கிரகங்களினுடைய வலிமையை நாட வேண்டும்.

உதாரணமாக, மனவலிமையினாலும் ஆச்சாரியர்கள் குருமார்கள் இவர்களுடைய ஆசிர்வாதத்தாலும் (சந்திரன் குரு இவர்களின் துணை கொண்டு) புதனின் பலவீனத்தைக் குறைத்துக் கொண்டால் புதனால் ஏற்படுகின்ற தோஷத்தை நீக்கிக் கொண்டு வாழலாம். அதாவது அவசரப்பட்டு வாயைக் கொடுக்காமல், அதிகப் படியான காரியங்களைச் செய்யாமல் சற்று பொறுமையாக கவனித்துச் செயல்படுகின்ற நிதானத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

கேந்திர ஆதிபத்திய தோஷம் பெற்ற ஜாதகங்கள், மிகச் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். ஆனால், அந்த அறிவு மற்றவர்களைக் கெடுப்பதற்காகவும், மற்றவர்களை குறித்து ஏதாவது இடைஞ்சலான விஷயங்களைப் பேசி, மன நிம்மதியை குறைப்பதாகவும், அதனால் பகையை சம்பாதிப்பதாகவும் அமையும் என்பதை மறந்துவிடக்கூடாது. புதன் கெட்டவர்களுக்கு, சந்திரனும் குருவும் உதவுவார்கள். புதனால் ஒரு மனிதன் கெடுவதை சந்திரன் அனுமதிக்காது. எனவே சந்திரனுக்குரிய பரிகாரங்களைச் செய்தால்கூட புதனின் தோஷங்களைக் குறைத்துவிடலாம்.

The post புதன் கெட்டுவிட்டால் இப்படித்தான் சமாளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mercury ,Aquarius ,Sun ,
× RELATED கும்பம்