×

ராஜகோபுர மனசு

(வல்லாள கோபுரக் கதை)

பகுதி 12

பாதுகாப்பு வீரர்களை சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள் என்கிற மன்னர் சொல்லுக்கு மௌனமாக தலையாட்டிய மாதப்பதண்ட நாயகர்,“ஆனாலும் இது சிக்கலான சூழ்நிலையரசே. கோயிலேயானாலும், பொதுவெளியில் பேசக்கூடிய விஷயமில்லை. இதை அரசவையை கூட்டித்தான் ஆலோசிக்கவேண்டும்.” என்றார்.“அப்போது, மாலை அரசவை கூடவேண்டுமென்கிற என் ஆணையை முன்மொழியுங்கள். இது மிகவும் அவசரகாலக்கூட்டமென சொல்லுங்கள். அனைத்து அமைச்சர்களும், உபதளபதிகளும் கண்டிப்பாக வரவேண்டுமென உத்தரவிடுங்கள். எல்லாவற்றுக்கும் முன், காம்ப்லிதேசத்தின் தற்போதைய நிலவரம் குறித்தறிய ஒற்றனை அனுப்புங்கள்.

காம்ப்லித்தேவன் குறிப்பிட்டதுபோல, அவனிடம் தஞ்சமடைந்த குல்பர்க்காவின் ஆளுநரும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பிவிட்டார்களா என துப்பறியச் சொல்லுங்கள். தப்பித்தவர்கள், நம் துவாரசமுத்திரத்தை அடைந்தால், அவர்களை எப்படி எதிர்கொள்வதென, அங்கிருக்கும் நம் பொறுப்புத்தளபதிக்கு, கட்டளையிடுங்கள். நமக்கு காலஅவகாசம் குறைவாகத்தானிருக்கிறது. எனவே, எல்லாம் விரைவாக நடக்கவேண்டும். நான் பயணக்களைப்புத்தீர, சிறிது ஓய்வுவெடுத்துவிட்டு, வந்துவிடுகிறேன். மாலை சந்திப்போம்.” என படபடவென உத்தரவிட்டு, மன்னர் வீரவல்லாளன் கிளம்பினார்.

வேகவேகமாகப் பேசிவிட்டு, படைவீரர்கள் சூழ, விரைவாக நடந்துபோய், தேரேறி அரண்மனைக்கு கிளம்பிப்போகிற மன்னரை, மாதப்பதண்ட நாயகர், கவலையோடு பார்த்தபடி பெருமூச்சுவிட்டார். “கோபுரக் கட்டுமானப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையிலாஇப்படி யொரு பிரச்னை வரவேண்டும்? காலம் என் மன்னரை நிம்மதியாகவே விடாதுபோல” என முணுமுணுத்தவர், தலையை சிலுப்பிக் கொண்டு, இயல்புக்குத்திரும்பி, மன்னரின்கட்டளையை, வாய்மொழியுத்தரவாக எல்லோருக்கும் அனுப்பினார்.

“அவசரகாலக்கூட்டமா?, அப்படியென்றால் ஏதேனும் போர்மேகம் சூழ்ந்துள்ளதா” என விசாரித்த, ஒரு அவசரகுடுக்கை அமைச்சனிடம்,
“பேசாமல், வாயை மூடிக்கொண்டு வந்துசேர்” என சீறினார். உபதளபதி
களிடம், தனது தனிஉத்தரவாக,
“எதற்கும், வீரர்களோடு துவார
சமுத்திரத்திற்கு போகத்தயாராகயிருங்கள்” என சொல்லிவைத்தார்.

இடையே, துவாரசமுத்திரத்தின் பொறுப்புத்தளபதி வேலாயுதமாறனாருக்கு, ஒற்றன்மூலம் தகவலனுப்பினார். சற்று கோட்டைக்காவலை பலப்படுத்தும்படி, எச்சரிக்கை செய்தார். வீரர்களை கண்கொத்திப்பாம்பாக இருக்கச் சொன்னார். அபயமென எவர்வந்தாலும், உள்ளேயழைக்க வேண்டாம் உத்தரவு வரும்வரை காத்திருக்க வேண்டுமென்றார். ஆனால், பெண்களையும், குழந்தைகளையும் மட்டும் தற்காலிகமாக உள்ளேயழைத்து, தனியறையில் அமர்த்தச் சொன்னார்.

வேற்றுமதமானாலும், பெண்களை மரியாதையாக நடத்த, கடுமையாகக் கட்டளையிட்டார். நாலாபக்கமும் உத்தரவுகள் பறந்தன. உத்தரவுகளெல்லாம் வேகமாக துவாரசமுத்திரம் நோக்கி பறந்து கொண்டிருந்த வேளையில், காலம் அங்கு வேறுகதையை நடத்திக் கொண்டிருந்தது. இங்கு ஹொய்சாலத்தின் அமைச்சரவை, நெய்விட்டு வளர்த்த யாகத்தீப்போல, திகுதிகுவென பரபரப்பாகியது. மாலையில் கதிரவன்மறைய, இன்னுமிரண்டுநாழிகைகள் இருப்பதற்கு முன்பாக, மொத்தமாய் அவையில் கூடியது. எல்லோரும் கூடிய சிலநிமிடங்களில், அரசிகளோடு அவைக்கெழுந்தருளிய மன்னரை, புகழ்பாடி வரவேற்றது. உள்ளே நுழைந்த மன்னர், வீரவல்லாளன் அரியாசனத்திலமர்ந்ததும், நேரடியாக விஷயத்திற்குவந்தார்.

“நல்லது. அனைவரும் விஷயமறிந்திருப்பீர்களென நினைக்கிறன். இனியென்ன செய்யலாம்? என்னயோசனை வைத்திருக்கிறது இந்தச்சபை? அமைச்சர்களில் மூத்தவர்களான சிங்கரங்கநாதனும், பீமராயனும், முதலில் பேசலாம்” என்றார். மன்னர் அப்படிக்கூறியதும், எழுந்த அமைச்சர்களில் மூத்தவர் சிங்கரங்கநாதன், “அரசே” என ஆரம்பிக்கும்போதே, வாயில்காப்பாளன் அவைக்குள்நுழைந்து, “அவசரசெய்தி” என்பதற்கான சைகைமுத்திரை காண்பித்தான். அவன்சைகை புரிந்துகொண்ட சிம்மரங்கநாதன், “விஷயமென்ன சொல்?” என்றதும், வாயில்காப்போன் குனிந்து, பணிந்து, நிமிர்ந்து, “துவாரசமுத்திரத்தின் பொறுப்புத்தளபதி வேலாயுதமாறனாரிடமிருந்து, அவசரச்சேதியோடு, ஆள் வந்திருக்கிறது” என்றான். மொத்தசபையு மதிர்ந்து.

“என்ன தகவலென்று தெரியவில்லையே” என கலவரத்துடன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, “வந்தவனை உடனே வரச்சொல்” என மன்னர் வீரவல்லாளன் கத்தினார். மன்னரின் கத்தலுக்கு மிரண்டு, விரைவாய் வெளியேறிய வாயில்காப்போன், வேலாயுதமாறனாரிடமிருந்து வந்தவனை உள்ளேயனுப்பினான். வந்தவனும், குனிந்து, பணிந்து, நிதானமாக நிமிர்ந்து, மன்னர்துதி பாட, கடுப்பாகி இடைமறித்த மன்னர், “வந்தவிஷயத்தை, முதலில்சொல்லடா” என இம்முறை கோபமாக சீறினார். வந்தவன்;“நேற்று விடிகாலை இருட்டின்போது, குல்பர்காவின் ஆளுநர் பஹாவுதீன் குர்ஷாப்பும், அவரது குடும்பத்தாரும், அவர்களது சிலபடைவீரர்களும், அபயம்வேண்டி, ரகசியமாக நமது துவாரசமுத்திரத்து எல்லையை அடைந்துள்ளனர்.

அவசரசேதியாக இதைச்சொல்லி, நமது எதிரிகளான அவர்களை ஏற்பதா, மறுப்பதா என்ற மன்னரின் உத்தரவைவேண்டி வேலாயுத மாறனார் காத்திருக்கிறார்’’. என்று உரத்தகுரலில், சொன்னான். அவன் சொன்னதைக்கேட்டு சபை, மீண்டும் மிரண்டது. தளபதி மாதப்பதண்ட நாயகர் தலையில் கையை வைத்துக் கொண்டார். அமைச்சர் சிங்கரங்கநாதன் அதிர்ச்சியோடு ஆசனத்தில்சாய்ந்தார். இளையராணி சல்லம்மா புரியாத மனநிலையில் குழம்பினார். மூத்தராணி மல்லம்மாவோ, “தங்கை சல்லம்மா கண்டகனவு பலித்து விடுமோ’’ என பயந்தார். அவையினர் எல்லோரும் பலவித மனநிலையிலிருக்க, நிதானமாக சிம்மாசனத்திலிருந்தெழுந்த மன்னர் வீரவல்லாளன், “மாதப்பதண்ட நாயகரே, படைகள் தயாராகட்டும். எவ்வளவு விரைவில் கிளம்பமுடியுமோ அவ்வளவு விரைவில் கிளம்பி, நம் முந்தையதலைநகரை படைகள் அடையட்டும்.

காலாட்படைகளுக்கு முன்பாக, குதிரைப்படைகிளம்பி, துவாரசமுத்திரத்தை அடையட்டும். என ஆணையிட்டார். மன்னர் அவ்வாறு கர்ஜித்துக் கொண்டிருந்த அதேசமயத்தில், டெல்லி சுல்தானின்படைகள் எதிர்பட்டோரையெல்லாம் வெட்டிக் கொன்றபடி காம்ப்லித்தேசத்திற்குள் நுழைந்தன எதிரியின்படைகள் உள்ளே நுழைந்துவிட்டதை அறிந்த காம்ப்லித்தேவன், தன்படையினரோடு போருக்கு தயாரானான்.

தயாராகி, போர்க்களம் புகுவதற்குமுன், திரும்பி தன்மனைவியரை பார்த்தான், அவன் எண்ணம்புரிந்த அரசியர்கள், மௌனமாக தலையாட்டினர். மன்னனோடு கிளம்பிய மொத்தப்படைகளும் அரண்மனையின் கோட்டைக்கதவை தாண்டுவதற்குள், அரண்மனைக்குள்ளிருந்து பெரும்புகைமண்டலம் கிளம்பின, அக்கரும்புகை மண்டலத்தோடு, அரண்மனைபெண்களோடு, தங்களைத் தாங்களே தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட காம்பிலித்தேவனின் மனைவியர்களின் அலறல்களும், கூச்சல்களும், கதறல்களும், அத்தனைதூரத்திற்கும் கேட்டது.

அத்தனையையும் நெஞ்சுபதைக்க, கண்ணீர் வழிந்தபடி திரும்பிப்பார்த்த காம்பிலித்தேசத்துவீரர்கள், வெறியானார்கள். ஆவேசத்துடன் டெல்லிப்படைகளை எதிர்த்து, களத்தில் போரிட்டனர். எதிரியானாலும் நம்பிவந்தவனை காப்பதற்காக களம்புகுந்த காம்பிலித்தேவன் ஆவேசமாக போரிட்டான். நாலாபக்கமும் சுழன்றுசுழன்று எதிரிகளை தாக்கினான்.

அவனின் வாள்சுழற்சிக்குமுன் சுல்தானின்படைகள் சற்று திணறத்தான் செய்தன. ஆனால், விதி வலியது. வழக்கம்போல, போர்த்தர்மம் மீறி, சண்டையிட்ட சுல்தானின் படைகளிடம், காம்பிலித்தேசம் வீழ்ந்தது. டெல்லிப்படைகள் காம்பிலித்தேசத்து மொத்தப்படைவீரர்களையும் கொன்றுக்குவித்துவிட்டு, தோற்ற காம்பிலித்தேவனின் தலையைவெட்டி, ஈட்டியில்சொருகி, அதோடே நகருக்குள் நுழைந்து சூறையாடின. அங்கும் எதிர்பட்டோரையெல்லாம் கொன்றுவிட்டு, மொத்தஊரையும் தீக்கிரையாகின.

அப்படியும், ஆவேசமடங்காமல், வந்த அதேவேகத்தில், துவாரசமுத்திரத்திற்கு விரைந்து, அதன்எல்லையின் நெருக்கத்தில் பதுங்கியிருந்த பஹாவுதீன் குர்ஷாப்பையும், அவரதுகுடும்பத்தாரையும் சுற்றிவளைத்து கைதுசெய்தன. காப்பாற்றவந்த குல்பர்க்காவின் வீரர்களை குத்திப்போட்டன. அவர்களைக்கொன்ற கையோடு, எல்லைக்காவலுக்கு நின்ற ஹொய்சாலப் படைவீரர்களையும் அம்பெய்தி கொன்றன.

அப்படியே அடாவடியாக கிராமங்களுக்குள் நுழைந்து, சிக்கியமக்களையெல்லாம் குடிசைக்குள் அடைத்து, தீயிட்டுக்கொளுத்திவிட்டு சென்றன. இருக்கின்ற சொச்சவீரர்களோடு விரட்டிய வேலாயுத மாறனாரின் கைகளில் சிக்காது தப்பித்தோடி, போகிறவழிகளிலெல்லாம் எதிர்படுகின்ற ஜனங்களை ஈட்டியெய்தி சாகடித்தன. மூன்று மணிநேரத்தில், மொத்த பாதகத்தையும் செய்துவிட்டு, கைதுசெய்த பஹாவுதீன் குர்ஷாப் மற்றும் அவன் குடும்பத்தவர்களோடு, துவாரசமுத்திரத்திலிருந்து காணாமல்போயின. ஒருநாள் இடைவெளியில் மொத்தத்தகவல்களும், அமைச்சர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருந்த மன்னர் வீரவல்லாளனை வந்தடைந்தன. முதலில் துவாரசமுத்திரம் சூறையாடப்பட்ட கொடுமை வந்தடைந்தது. அதோடு குல்பர்க்காவின் ஆளுநர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு, டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்ட தகவலும் சொல்லப்பட்டது.

அந்ததகவல் வந்தகையோடு, காம்பிலிதேசம் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட கோரத்தையும், காம்பிலிதேவனின் கொடூரமரணத்தையும், மொத்த அரண்மனைபெண்களும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவரத்தையும், அவசரமாக கொண்டுவந்த ஒற்றன், அத்தனையையும் மன்னரின் அனுமதியோடு சபையில் தெரிவித்தான். அரண்மனை பெண்கள் தீக்குளித்த கொடுமை சொல்லும்போது மட்டும், பெண்கள் வரிசையிலிருந்த யாரோவொருத்தி விசிம்பினாள். இன்னொருத்தி முகத்திலறைந்து கொண்டழுதாள்.

அத்தனையையும் கேட்டு மன்னர் வீரவல்லாளன் ஆவேசமாக எழுந்தார். “வடக்கத்தானோடான கப்பதொகை ஒப்பந்தம் இன்றோடுமுறிகிறது. இனிமேல் கப்பதொகையை செலுத்தவேண்டாம். ஆவதை பார்த்துக்கொள்வோம். ஒன்றைமட்டும் உறுதியாக சொல்கிறேன். இத்தனை அநியாயம்செய்கின்ற சுல்தானின்படைகளுக்கு என்கையால் முடிவுரை எழுதுவேன். கொடூரமாக கொல்லப்பட்ட காம்பிலித்தேவன் சாவுக்கு, நியாயம்செய்வேன். பிரிந்த சணல்கயிறாய் கிடக்கிற, அண்டைஅரசுகள் அத்தனையையும் ஒன்றாக்கி தேர்வடக்கயிற்றாக்கி, சுல்தானுக்கு எதிரான பெரும்பலமாக்குவேன்.

இம்முறை ஹொய்சாலத்தின் வீரமெதுவென வடக்கத்தானுக்கு நான்காட்டுவேன். இது அன்றாடம் நான் வணங்கும் அண்ணாமலையானின்மீது சத்தியம்.” என கைதூக்கி முழக்கமிட்டார். மன்னர் வீரவல்லாளனின் முழக்கத்திற்கு, உணர்ச்சி வயப்பட்ட ஹொய்சாலத்தின்தளபதிகள், மீசையை முறுக்கினர். அத்தனை வீரர்களும் முறுக்கிய கைகளை உயர்த்தியபடி; “வாழ்க மன்னர், வெல்க ஹொய்சாலம்” என சபையதிர முழக்கமிட்டனர். அப்படி, எல்லோரும் ஆவேசப்பட்ட அந்தகணத்திலிருந்து, இன்னும் பதினைந்து வருடங்களுக்கு, மிகமோசமாக தொடரப்போகின்ற போர்மேகங்கள், அருணையை சுற்றிலும் மிகவும் அடத்தியாக கருக்கொள்ள ஆரம்பித்தன.

(தொடரும்)

The post ராஜகோபுர மனசு appeared first on Dinakaran.

Tags : Madhapadanda Nayak ,
× RELATED மார்கழி ஊர்வலம்!