×

வள்ளலின் உள்ளம் முனுஸ்வாமி

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமை. சேலத்துக்கு அருகிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்துக்கு ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகளை தரிசிக்கச் சென்றிருந்தேன். அதுவரை அடிக்கடி ஸத்குருவை தரிசிக்கும் நான், உடல்நலக் குறைவால், அந்தச் சந்தர்ப்பத்தில் மாதக் கணக்கில் செல்ல முடியாமல் இருந்தது.நான் ஸ்கந்தாஸ்ரமத்தை அடைந்த போது மாலை மூன்று மணி இருக்கும். அவ்வளவாகக் கூட்டமில்லை.

ஸ்வாமிகள், அகலமான ஒரு நாற்காலியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். முகத்தில் எப்போதும் போல், அதே புன்னகை, சாந்தமும், கருணையும் நிறைந்து வழியும் அருட்கண்கள். ஸத்குருவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தேன். சிரித்தவாறு என்னை ஏறிட்டுப் பார்த்தவர், கையை உயர்த்தி ஆசீர்வதித்தபடி, “அனுமான்தாசனை எங்கே ரொம்ப நாளா காணோம்?” என்று வினவினார்.

என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மீண்டும் ஒரு முறை அவரை நமஸ்கரித்தேன்.உடனே, ஸ்வாமிகள், “சரி… சரி. அங்கே சந்நதிகளுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடலாமே!” என்று பணித்தார். ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பினேன். அப்போது அங்கு டூரிஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர் இறங்கினர். கை கால்களை அலம்பிக் கொண்டு ஸ்வாமிகள் அமர்ந்திருந்த ஹாலுக்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரையும் கீழே உட்காரச் சொன்னார் ஸ்வாமிகள். நமஸ்கரித்து விட்டு அமர்ந்தனர். ஸ்வாமிகள் சிரித்தபடி, “நீங்கள்ளாம் எந்தூர்லேர்ந்து வரேள்?” என்று கேட்டார்.

உடனே ஒருவர் எழுந்து, “நாங்கள் மதுரை பிராந்தியத்தைச் சேர்ந்தவங்க ஸ்வாமி” என்றார்.“ஓஹோ… மதுரைல எல்லோரும் ஒரே ஆபீஸ்ல வேல பாக்றேளாக்கும்…” – ஸ்வாமிகள். கூட்டத்தில் ஒருவர் எழுந்து, “இல்லே ஸ்வாமி. நாங்கள்ளாம் ‘தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவங்க… வேற வேற இடத்திலே வேலை பார்க்கிறோம்” என்றார்.
தொண்டு நிறுவனம்னா? என்ன என்று தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்டார் ஸ்வாமிகள்.

ஒரு பெண்மணி எழுந்து பவ்யமாக இந்த தொண்டு நிறுவனம், உலகம் முழுக்கச் செயல்படர ஒரு அமைப்பு. நம்ம நாட்டுல பல ஊர்களில் செயல்படறது!” என்று பெருமைப்பட்டாள்.ஸ்வாமிகள் சிரித்தபடியே, தெரியாதது மாதிரி கேட்டார். “ஓஹோ! அதிருக்கட்டும்! ஒங்க தொண்டு நிறுவனத்தோட ‘ஆக்டிவிடீஸ்’ (செயல்பாடுகள்) என்னென்னன்னு சொல்ல முடியுமா?”

ஒருவர் முந்திக் கொண்டு, “பல வகையிலும் அடுத்தவங்களுக்கு உதவி பண்றது, எங்க அமைப்போட குறிக்கோள் ஸ்வாமி!” என்றார்.ஸ்வாமிகள் விடவில்லை. “அடுத்தவாளுக்கு உதவின்னா… உதாரணமா… பார்வை இல்லாத ஒருத்தரை சாலையின் ஒரு பக்கத்துலேர்ந்து இன்னொரு பக்கத்துக்குக் கையைப் புடிச்சு அழச்சிண்டு போய் விடறது… அந்த மாதிரியா?” என்று வினவினார் ஸ்வாமிகள்.“அது மாத்திரம் இல்லே ஸ்வாமி. எல்லாவிதமான சமூக சேவையிலேயும் நாங்க ஈடுபடுறோம்” என்று பதிலளித்தார் ஒருவர்.அப்படியும் விடவில்லை ஸ்வாமிகள். “எல்லாவிதமான சமூக சேவையிலும்னா… எனக்குப் புரியலே. கொஞ்சம் விவரமாக விளக்கிச் சொல்லணும்!”

அந்த அமைப்பின் தலைவர் போலிருந்த ஒருவர் பேசினார். “நான் விவரமா சொல்றேன் ஸ்வாமி. இந்த சமுதாயத்துக்குத் தொண்டாற்றுவது எங்க அமைப்போட குளிக்கோள். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பிளட் டோனேஷன் கேம்ப், கண் பரிசோதனை கேம்ப்… இப்படி பல சேவைகளை ஏழைகளுக்குப் பண்றது எங்க அமைப்பின் குறிக்கோள் ஸ்வாமி…”உடனே ஸ்வாமிகள், “ரொம்ப சந்தோஷம்… ரொம்ப சந்தோஷம்!” என்று பாராட்டிவிட்டு, “ஒங்க சேவையை மனுஷ்ய (மனித) இனத்துக்கு மாத்திரம்தான் செய்வேளா… இல்லே எல்லா ஜீவராசிகள் பேர்லயும் கருணை காட்டுவேளா?” என்று சிரித்தபடி கேட்டார்.

அனைவரும் கோரஸாக, “கண்டிப்பா… எல்லா ஜீவ ராசிகள் பேரிலேயும் கருணை வைத்து உதவுவோம் ஸ்வாமி!” என்று குரல் கொடுத்தனர்.திடீரென கண்மூடி அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள். பத்து நிமிடம் கழித்து தியானம் கலைத்த ஸ்வாமிகள் முகத்தில், ஒரு மந்தகாசச் சிரிப்பு. அவர்களைப் பார்த்துக் கேட்டார்: “நீங்களெல்லாம் இன்று மத்தியானம் சேலம் ‘வில்வாத்திரி பவன்’ ஓட்டலில் தானே சாப்பிட்டீர்கள்?”“ஆமாம் ஸ்வாமி… அங்குதான் சாப்பிட்டோம்!” என்றனர், அனைவரும்.

சாப்பாடு பிரம்மானந்தமா இருந்திருக்கும்… அது சரி. சாப்பிட்டு வெளியே வந்தவுடன் பக்கத்து பெட்டிக் கடையில் ஆளுக்கு ரெண்டு மலைப்பழம் வாங்கினீர்கள் அல்லவா?”அனைவரும் ஆச்சரியத்துடன், “ஆமாம் ஸ்வாமி… வாங்கினோம்!” என்றனர்.உடனே, ஸ்வாமிகள், “பழத்தை உரித்துச் சாப்பிடும்போது, குப்பை பொறுக்கும் ஒரு சிறுவன் உங்கள் அனைவரிடமும் வந்து, அங்கு நின்று கொண்டிருந்த இரு கர்ப்பிணி பசு மாடுகளைக் காட்டி, ‘ஐயா, புண்ணியவான்களே… இந்த ரெண்டு பசு மாடுங்களும் ரொம்ப நேரமா பசியோடு நிக்குது…

அதுங்க பசியாற நாலு வாழைப் பழம் வாங்கிக் கொடுங்க’னு கெஞ்சினானா, இல்லையா? ஒங்கள்ள யாராவது ஒருத்தர், அந்தக் கர்ப்பிணிப் பசுக்களின் பசி தீர்க்க, நாலு வாழைப் பழங்களைக் கொடுத்து உதவினேளானு சொல்லுங்கோ, பார்ப்போம்!” என்று புருவங்களை உயர்த்தி சற்று உஷ்ணமாகக் கேட்டார்.

ஒருவரும் வாய் திறக்கவில்லை. அனைவரும் பிரமை பிடித்த மாதிரி அமர்ந்திருந்தனர். ஸ்வாமிகள் விடவில்லை: “அந்தச் சிறுவன் உங்களிடம், ‘அந்த வாழைப்பழத் தோல்களையாவது எங்ககிட்ட குடுங்கய்யா… மாடுகளுக்கு அதயாச்சும் குடுக்கறேன் என்று கெஞ்சினபோதும்… தோல்களைக் கூட கொடுக்காமல் புழுதி மண்ணில் வீசி எறிந்து விட்டீர்களே! இது தர்மமா? யோசனை பண்ணுங்கோ…”ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. ‘சேலம் விஸ்வாத்திரி பவன் ஓட்டல் வாசலில் நடந்த சம்பவம் ஸத்குருநாதருக்கு எப்படித் தெரிய வந்தது?’ என அனைவரும் வியந்தனர். இந்த அடியவன் உட்பட! சில நிமிடங்கள் அங்கு மௌனம் நிலவியது! மௌனம் கலைத்தார் ஸ்வாமிகள்.

“இதெல்லாம் எனக்கு எப்டி தெரிஞ்சுதுனு யோசிக்காதீங்கோ! அம்மா புவனேஸ்வரிதான் எங்கிட்டே வந்து இத்தனையும் சொன்னா! இல்லாட்டா நேக்கு என்ன தெரியுப் போறது?” என்று ெசால்லிச் சிரித்த ஸ்வாமிகள் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ. இப்போ இங்கே ஒருவர் வரப்போறார். அவரை ஒங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்…! என்றார்.பதினைந்து நிமிடம் கழிந்தது, எண்ணெய் தடவி படிய வாரிய தலை… உடம்பு முழுவதும் குழைத்துப் பூசிய திருநீறு… இடுப்பில், துவைத்துக் கட்டிய வெள்ளை வேஷ்டி சகிதம், சுமார் நான்கடி உயரமுள்ள ஒரு சிறுவன், அந்த ஹாலுக்குள் பயபக்தியுடன் உடல் நடுங்க நுழைந்தான். அவன், கையில் நான்கு மலை வாழைப் பழங்கள்.

ஸ்வாமிகளுக்கு முன்பாக பழங்களைச் சமர்ப்பித்து விட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம். “வாடாப்பா முனுஸ்வாமி… வா! சௌக்யமா இருக்கியா? எங்கே நாலு நாளா ஒன்ன காணும்? வேலை ஜாஸ்தியோ” என வாஞ்சையோடு விசாரித்துவிட்டு, “அது சரி… இப்போ எங்கேருந்து வரே?” என்று கேட்டார். உடனே, அந்தச் சிறுவன் “காலைல உடயாபட்டிலேர்ந்து கிளம்பி குப்பைங்களை பொறுக்கி கிட்டே சேலம் வரைக்கும் போய் வித்துப்புட்டு திரும்பி வரேன் சாமி!” என்று பணிவோடு சொன்னான்.

ஸ்வாமிகள், “சரி… அது போகட்டும்… இதோ ஒக்காந்திருக்காளே இவாளையெல்லாம் நீ சேலத்ல பாத்தியா?” என்று வினவினார்.அவர்களைக் கூர்ந்து நோக்கிவிட்டு அவன் சொன்னான். “சேலம் ஓட்டல் வாசல்ல மதியம் இவங்களையெல்லாம் பாத்தேன். ரெண்டு சேனை பசுமாடுங்க, அங்கே பசியோடு நின்னுச்சு. நாலு வாழைப்பழம் அதுங்களுக்காக இவங்க கிட்டே கேட்டேன். அவுங்களுக்குக் குடுக்க மனசு வர்லே. பழத் தோலையாச்சும் தரும்படி கெஞ்சினேன். பழத் தோலை மண்ணுல கெடாசிட்டாங்க.

அப்புறமா பொறுக்குன குப்பைங்களை நஷ்டத்துக்கு வித்துப்பிட்டு ரண்டு ரூபாய், ராத்திரி சோறாக்க ஆயாகிட்டே கொடுத்துட்டு, மீதிக்கு எட்டு வாழைப்பழம் வாங்குனேன் சாமி. தலைக்கு ரண்டா அந்த சென மாடுங்களுக்கு கொடுத்துப்புட்டு, நாலு பழத்த ஒங்க முன்னாடி வெச்சிருக்கேன் சாமி. நீங்க சாப்பிட மாட்டீங்க. இங்க மடத்துல இருக்கற பசுமாட்டுக்கு ரண்டை கொடுப்பீங்க. யாராச்சும் ஒங்கள பாக்க வர்றவங்க பசியோடு வந்தா… அவங்களுக்குக் கொடுப்பீங்க…!”

எந்த தொண்டு நிறுவனத்துலையும் உறுப்பினரல்லாத அந்த பதினான்கு வயது சிறுவனின் செயலைக் கண்டு அனைவரும் வியந்தனர். அவர்கள் அனைவரையும் இரவு சாப்பிட்டு விட்டுப் போகும்படி உத்தரவிட்டார் ஸ்வாமிகள்.சில வருடங்கள் கழித்து அடியேன் ஸ்கந்தாஸ்ரமம் சென்றபோது கேள்விப்பட்ட ஒரு நல்ல விஷயம்: ஸத்குருநாதர் அருளால், முனுஸ்வாமிக்கு அபுதாபியில் நல்ல சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்துப் போயுள்ளான் என்பது!

தொகுப்பு: ரமணி அண்ணா

The post வள்ளலின் உள்ளம் முனுஸ்வாமி appeared first on Dinakaran.

Tags : Vallalin Ullam Munuswami ,Sadhguru ,Shantananda Swami ,Skanda Ashram ,Salem ,Skanda Ashram… ,
× RELATED பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை...