×

கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு பாஜ நிர்வாகிகள் கை கலப்பால் பரபரப்பு பாஜ திருவண்ணாமலை வடக்கு மாவட்ட

சேத்துப்பட்டு, ஜன. 7: பாஜ திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கை கலப்பில் முடிந்தது. தமிழக பாஜக தலைமையின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து கருத்து கூட்டம் மற்றும் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதன்படி சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் கருத்து கேட்பு கூட்டம் மற்றும் வாக்குப்பதிவு குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் மனு செய்தவர்களின் பட்டியலில் தற்போது தலைவராக உள்ள ஏழுமலை வயது மூப்பு அடிப்படையில் நீக்கப்பட்டார்.
அதேபோன்று உறுப்பினர்கள் குறைவாக சேர்த்தவர்களையும் நீக்கப்பட்டு, வெங்கடேசன், சுமதி, புவனேஷ் குமார், மோகன், கவிதா, பார்வதி, அருள், முத்துசாமி, சாய்பாபா கோவிந்தன் என 10 பெயர்கள் புதிய தலைவருக்கான வேட்பாளர்களாக பார்வையாளர்களுக்கு அறிவிப்பு ஒட்டப்பட்டது.

இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன், சுமதி 2 நபர்களும் மேலும் குற்ற வழக்கில் உள்ள சாய்பாபா பெயரும் இருந்தது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார், மாவட்ட தேர்தல் அதிகாரி பலராமன் ஆகியோர் இந்த 3 பெயர்களை நீக்கி அறிவித்தனர். இதனிடையே நீக்கப்பட்ட கோவிந்தன், சுமதி, சாய்பாபா ஆகியோர் யாரை கேட்டு எங்கள் பெயரை நீக்கினீர்கள் தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது. புவனேஷ் குமார் தேர்தலை ஏன் நிறுத்த வேண்டும் என கேட்டபோது சாய்பாபா பிரிவினருக்கும் புவனேஷ் குமார் பிரிவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கூச்சல் குழப்பத்தைக் கண்டதேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் மாவட்ட தேர்தல் அதிகாரி பலராமன் ஆகியோர் இரு தரப்பினர் சமாதானம் பேசினார். அதனைத் தொடர்ந்து மேலும் 5 நபர்கள் சேர்க்கப்பட்டு மேலும் சங்கர், பூங்காவனம், வெங்கட்ராமன், வேலு, சரவணன் உள்பட 12 பேர் கொண்ட பட்டியல் உடன் மாவட்ட நிர்வாகிகள் 80 பேர் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டு ரகசிய ஓட்டு பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு பெட்டியை சீல் வைத்து கமலாயத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தெள்ளார் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் கூறியபோது, மாவட்ட தலைவர் பதவிக்கு தகுதி இல்லாத ஒரு சிலர்வந்து தேர்தலை நிறுத்த முயற்சி செய்தனர். அதனை இந்த கூட்டம் முறியடித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

The post கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு பாஜ நிர்வாகிகள் கை கலப்பால் பரபரப்பு பாஜ திருவண்ணாமலை வடக்கு மாவட்ட appeared first on Dinakaran.

Tags : BJP ,Tiruvannamalai North District ,Chettupattu ,Tamil Nadu BJP ,Tamil Nadu… ,
× RELATED மதுரையில் தடையை மீறி பாஜக பேரணி: போலீஸ் குவிப்பு