- விக்கிரவாண்டி
- செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி
- பழனிவேல்
- விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் தெரு
- விழுப்புரம் மாவட்டம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் செயின்ட் மேரிஸ் மேல்நிலை பள்ளியில் 3 வயதான எல்கேஜி மாணவி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் லியோ லட்சுமி (3). விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.
நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிறுமி லியோ லட்சுமி காலை இடைவேளையில் வகுப்பை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இடைவேளை நேரம் முடிந்தும் மாணவி வகுப்பறைக்கு திரும்பாத நிலையில் குறிப்பிட்ட வகுப்பு ஆசிரியர் இதை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் திடீரென பிற்பகல் 3 மணியளவில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளின் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பள்ளி நிர்வாகத்தினர் பேச்சு, மூச்சில்லாமல் பள்ளி வளாகத்திற்குள் கிடந்த லியோ லட்சுமியை காரில் தூக்கி சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது குழந்தை பள்ளியின் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே லியோ லட்சுமி இறந்த தகவலை கேள்விப்பட்ட பழனிவேலும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுததோடு சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதல்வர் இரங்கல், ரூ.3 லட்சம் நிதியுதவி: இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘‘விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியோ லட்சுமி, விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் நேற்று பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
The post பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது மாணவி பரிதாப பலி: விக்கிரவாண்டியில் பதற்றம் appeared first on Dinakaran.