×

எதை எதிர்த்தாலும் அதை உறுதியாக செய்யக் கூடியவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான் எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது

* படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரின் மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த தலைவர்கள் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரது படங்களை திறந்து வைத்தார்.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில், 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள். 8 கேபினட் அமைச்சர்கள், 13 இணை அமைச்சர்கள் என்று மிக அதிக அளவில் தமிழர்கள் ஒன்றிய அரசில் கோலோச்சியது அவருடைய அமைச்சரவையில் தான். அதுவும் மிகமிக முக்கியமான பல துறைகளை தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலமாக எண்ணற்ற திட்டங்கள் நமக்கு கிடைத்தன.

நமது நூற்றாண்டு கோரிக்கையான தமிழ் செம்மொழி என்பதை அறிவித்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் தான் மன்மோகன். சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம். இப்படி எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வர காரணமாகயிருந்தவர் மன்மோகன் சிங்.

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவு என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. தந்தை பெரியார் குடும்பத்தின் பெருஞ்செல்வம் மட்டுமல்ல, அவருடைய தந்தை ஈ.வெ.கி.சம்பத் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் நெருக்கமான நண்பராக இருந்தார். திமுகவை விட்டு சம்பத் விலகிய பிறகும், அவரை அண்ணா விமர்சிக்கவில்லை. அதேபோல் சில நேரங்களில் இளங்கோவனும் கலைஞரை அரசியல் சூழல் காரணமாக விமர்சிப்பார். ஆனால், கலைஞர் அவரைப்பற்றி எதுவும் பேச மாட்டார்.

காரணம், ‘சம்பத் பையன் தானே’-பேசட்டும் என்று பெருந்தன்மையோடு இருப்பார். மனதில் உள்ளதை மறைக்காமல், அதே நேரத்தில் துணிச்சலாக, தெளிவாக எதைப் பற்றியும் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் பேசக் கூடியவர் தான் ஈவிகேஎஸ்.இளங்கோவன். ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் இளங்கோவன். ‘இதுதான் உண்மையான காமராசர் ஆட்சி’ என்று வெளிப்படையாக கூறியவர் தான் அவர். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், துணை தலைவர் ஏ.எம்.முனிரத்தினம், அமைச்சர் பொன்முடி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், கொமதேக தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் ரூபி மனோகரன்,

முன்னாள் எம்பி ஜெ.எம்.ஆரூண், எம்பிக்கள் சசிகாந்த் செந்தில், விஜய் வசந்த், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், சஞ்சய் சம்பத், மாநில பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, டி.செல்வம், எம்எல்ஏ ராமச்சந்திரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், முன்னாள் பொருளாளர் பி.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் எஸ்.தீனா, இலக்கிய அணி தலைவர் புத்தன், எஸ்சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் மா.வே.மலையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எதை எதிர்த்தாலும் அதை உறுதியாக செய்யக் கூடியவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான் எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது appeared first on Dinakaran.

Tags : EVKS.Ilangovan ,Manmohan ,Singh ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Manmohan Singh ,Congress ,Kamaraj Arangam ,Teynampet ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!