×

டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்பது கூட தெரியாதா? ஒன்றிய பாஜ அரசை ஒரு வார்த்தைகூட குறிப்பிட்டுவிடாதபடி பதிவிடுவது ஏன்? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்

சென்னை: “டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி? சுரங்கம் அமைக்க முயலும் ‘ஒன்றிய பாஜ அரசை’ ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி” என்று அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய நடைபயண போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது என சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

முதுகெலும்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் தனது பதிவில் தப்பித்தவறி கூட டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் ‘ஒன்றிய பாஜ அரசை’ பற்றி ஒரு வரி அல்ல ஒரு வார்த்தை கூட இடம்பெறாத படி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார். பழனிசாமியின் வீரம் எல்லாம் அவ்வளவுதான்.
மோடி அரசை கண்டிக்கும் வகையில்தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் முன்னெடுத்தார்கள்.

இந்த விஷயம் எல்லம் லாவகமாக மறைத்துவிட்டு பொய் முலாம் பூச முற்பட்டிருக்கிறார் பழனிசாமி. ஆனால், அந்த பொய் ஒவ்வொரு முறையும் அம்பலப்பட்டு நிற்கிறது. மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என சொன்னதோடு மட்டுமல்லாது தான் முதலமைச்சராக உள்ளவரை ஒன்றிய அரசு டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க விட மாட்டேன் என நெஞ்சுரத்தோடு கூறி டங்கஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆனால் அதிமுகவோ டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க காரணமான சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்த போது வழிய சென்று ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டு உரிமையை ஒன்றிய அரசின் காலடியில் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தது. பழனிசாமியின் அந்த துரோகத்தை காலம் உள்ளவரை மக்கள் மறக்கமாட்டார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கருணையேயின்றி காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக்கொன்ற எடப்பாடி பழனிசாமி, இன்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என நடிப்பது “கொடூர கொலைகாரன் நல்லொழுக்க வகுப்பெடுப்பதற்கு ஒப்பானது.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரை கண்டிக்க துப்பில்லை, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி, வெள்ள நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டிக்க வக்கில்லை. துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார் என யுஜிசி கொடுத்த ஷாக் புத்தியில் ஏறவில்லை.

ஆனால், எதிர்க்கட்சி தலைவர் என்ற இருப்பை காட்டிக்கொள்ள மட்டும் ஆளாய் பறக்கிறார். அதிமுகவின் பொது செயலாளர் என்பதையும் மறந்து பாஜ தலைவரைப் போல நடந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு நலனுக்காக எந்த குரலும் கொடுக்காமல் தனது அரசியல் ஆதாயத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு பாஜ வோடு கள்ளக் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்பது கூட தெரியாதா? ஒன்றிய பாஜ அரசை ஒரு வார்த்தைகூட குறிப்பிட்டுவிடாதபடி பதிவிடுவது ஏன்? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi government ,BJP government ,Minister ,Raghupathi ,Edappadi ,Chennai ,Palaniswami ,Tamil Nadu… ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!